மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தின் அழகை கெடுக்கும் ஆக்கிரமிப்புகள் - ‘களை’ எடுக்குமா மாநகராட்சி?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தின் அழகை கெடுக்கும் வகையில், அதனை சுற்றியுள்ள சாலைகளில் வாகன பார்க்கிங், கடைகள் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளன. அதனால், தெப்பக்குளத்திற்கு வந்து செல்லும் சுற்றுலாப்பயணிகள், உள்ளூர் மக்கள், தெப்பக்குளம் சாலையை கடந்து செல்வதற்கு மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் தொன்மையான நகரான மதுரை பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றை கொண்டுள்ளது. மதுரைக்கு மேலும் சிறப்பும், அழகும் சேர்க்கும் வகையில் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் உள்ளது. திருமலை நாயக்கர் தன்னுடைய அரண்மனையை கட்டுவதற்கு மண் எடுத்த இடமே, தற்போது தெப்பக்குளமாக உள்ளது.

1000 அடி நீளமும், 950 அடி அகலமும் கொண்டு சதுர வடிவில் இந்த தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தின் ஆழம் 29 அடியாகவும், நீர் கொள்ளளவு 115 கன அடியாகவும் உள்ளது. இந்த தெப்பக்குளத்தை நிரப்ப அருகில் உள்ள வைகை ஆற்றில் இருந்து கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த கால்வாய்கள் பராமரிப்பு இல்லாமல் மூடியநிலையில் தெப்பக்குளம் தண்ணீர் இல்லாமல் நிரந்தர வறட்சிக்கு இலக்கானது.

கடந்த அதிமுக ஆட்சியில் அந்த கால்வாய்கள் மீட்டெக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்து வைகை ஆற்றில் இருந்து மீண்டும் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதனால், தற்போது ஆண்டுமுழுவதும் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப காணப்படுகிறது. படகுப்போக்குவரத்து விடப்பட்டுள்ளது.

பொதுமக்கள், குழந்தைகளுடன் குடும்பமாக தினமும் மாலை நேரங்களில் தெப்பக்குளத்திற்கு வந்து செல்கிறளார்கள். விடுமுறை நாட்களில் திருவிழா போல் தெப்பக்குளத்தில் மக்கள் திரள்கிறார்கள். ஏராளமான சினிமா திரைப்படங்கள் எடுக்கப்பட்டதோடு, மதுரையின் வரலாற்று சிறப்பு மிக்க இடமாகவும் இந்த தெப்பக்குளம் இருப்பதால் சுற்றுலாப்பயணிகளும் விரும்பி வருகிறார்கள். அதனால், வணிக நோக்கத்தில் ஏராளமான கடைகள், தெப்பக்குளத்தை சுற்றி பெருகிவிட்டன. பல கடைகள் நிரந்தரமாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கடைகள் அனைத்தும், மாநகராட்சி, இந்துசமய அறநிலையத்துறை அனுமதி பெற்று நடத்தப்படுகிறதா? அல்லது ஆக்கிரமிப்பா? என்பது தெரியவில்லை. மாநகராட்சி அதி்காரிகளும், தெப்பக்குளத்தை சுற்றியுள்ள சாலைகளை கண்காணிப்பதில்லை. அதனால், தற்போது தெப்பக்குளத்தை சுற்றியுள்ள சாலைகள் தற்போது முழு நேர ‘பார்க்கிங்’ ஆக மாறிவிட்டன.

அருகில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு வருவோர், தங்கள் கார்களை தெப்பக்குளம் சாலையில் இரு புறமும் பார்க்கிங் செய்து செல்கிறார்கள். அதனால், தெப்பக்குளத்திற்கு பொழுதுப்போக்கவும், நடைப்பயிற்சிக்கு வருவோரும் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். முகூர்த்த நாட்களில் திருமண மண்டபலங்களுக்கு வரும் அனைத்து வாகனங்களும் குறுக்கும், நெடுக்குமாக ‘பார்க்கங்’ செய்யப்படுவதால் வாகன ஓட்டிகளும், தெப்பக்குளம் சாலையை கடந்து செல்ல முடியாமல் திண்டாட்டம் அடைந்துள்ளனர்.

வாகனங்கள் பார்க்கிங், ஆக்கிரமிப்பு கடைகள் போன்றவற்றால் தெப்பக்குளத்தின் அழகு நாளுக்கு நாள் மங்கி வருகிறது. அதனால், விடுமுறை நாட்களில் தெப்பக்குளத்திற்கு பொழுதுப்போக்குவதற்கு வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. ‘பார்க்கிங்’கை முறைப்படுத்தி அதற்காக இடம் ஒதுக்கி மாநகராட்சி நிர்வாகம், தெப்பக்குளம் சாலைகளை மீட்டு, தெப்பக்குளத்தை அழகுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE