சாயில் நெய்லிங், ஹைட்ரோ சீடிங்... - உதகையில் நிலச்சரிவைத் தடுக்க புதிய தொழில்நுட்பம்

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: உதகை - கோத்தகிரி சாலையில் மடித்தொரை பகுதியில் நிலச்சரிவைத் தடுக்கும் புதிய தொழில்நுட்ப பணியை நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் ஆர்.சந்திரசேகர் ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம் மக்களின் கோடைவாசஸ்தலங்களில் முக்கியமானதாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவைத் தடுக்க நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் சாயில் நெய்லிங் (soil nailing) பொருத்தி ஹைட்ரோ சீடிங் (hydro seeding) முறையில் மலைச்சரிவுகளில் நிலச்சரிவைத் தடுத்து பசுமையை பேணிப் பாதுகாக்கும் தொழில்நுட்பம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பரிசோதனை முயற்சியாக உதகை - கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து மற்றும் பாக்கியநகர் ஆகிய இரு இடங்களில் செயல்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டில் இத்துறையின் பராமரிப்பின் கீழ் உள்ள சலைகளில் நிலச்சரிவு அபாயம் உள்ள 3 இடங்களில் இப்பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், உதகை கோத்தகிரி சாலையில் மடித்தொரை என்னுமிடத்தில் நடைபெற்று வரும் நிலச்சரிவைத் தடுக்கும் இப்புதிய தொழில்நுட்ப பணியை தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர் ஆர்.சந்திரசேகர் இன்று (மே 17) ஆய்வு செய்தார். பணித்தளத்தில் இப்புதிய தொழில்நுட்பம் தொடர்பான அறிவுரைகளை பணி மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு வழங்கினார். மேலும், கார்ஸ்வுட் பகுதியில் நடைபெறும் சாலையோர தடுப்புச்சுவர் பணியையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, கோவை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளர் ரமேஷ், உதகை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் செ. குழந்தைராஜ் மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளர்கள் வி.பி.ஜெயபிரகாஷ், ஆர். மூர்த்தி மற்றும் உதவிப்பொறியாளர்கள் மா.ஸ்டாலின், என். பாலச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE