தளி, அஞ்செட்டி, உரிகம், உள்ளுகுறுக்கி பகுதியில் வறட்சியால் ‘உரிகம் புளி’ மகசூல் பாதிப்பு

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: சந்தையில் அதிக வரவேற்பு பெற்ற உரிகம் புளி நிகழாண்டில் வறட்சி காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, அஞ்செட்டி, உரிகம், உள்ளுகுறுக்கி உள்ளிட்ட பகுதி மக்களின் பிரதானத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. மேலும், இப்பகுதியில் மலை சார்ந்த பகுதி என்பதால், இங்குள்ள தரிசு நிலங்களில் வெப்ப மண்டல பயிர் மற்றும் நீண்ட காலம் பலன் தரக்கூடிய புளியை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

உயர் ரகம்: குறிப்பாக இங்கு உயர் ரகமான ‘உரிகம் புளியை’ விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். உரிகம் புளி அதிக சதைப் பற்றும், நல்ல சுவையாகவும் இருப்பதால், தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து வரும் வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர்.

மேலும், கிருஷ்ணகிரி புளி சந்தை மற்றும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி கர்நாடக மாநிலம் தும்கூர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பகுதியில் உள்ள புளி சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து வியாபாரிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

ஆண்டு முழுவதும் விற்பனை: ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் ஜூன் வரை புளி அறுவடை நடைபெறும். விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் புளியம்பழங்களை மேலோடுகளுடன் வாங்கி, கூலித் தொழிலாளர்கள் மூலம் ஓடு (தோல்) மற்றும் விதைகளை நீக்கி சுத்தப்படுத்தி அதைக் குளிர்பதன கிடங்கில் இருப்பு வைத்து ஆண்டு முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.

நிகழாண்டு வறட்சி காரணமாக தளி, அஞ்செட்டி, உரிகம், உள்ளுகுறுக்கி உள்ளிட்ட பகுதிகளில் உரிகம் புளி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளிடமிருந்து அதிக அளவில் கொள்முதல் ஆர்டர் இருந்தும் உற்பத்தி பாதிப்பால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கை கொடுக்கும் புளி: இதுதொடர்பாக உரிகம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது: மலைகள் சூழ்ந்து வறண்ட பகுதியான உரிகம் உள்ளிட்ட பகுதியில் புளி சாகுபடிக்கு ஏற்ற நல்ல மண்வளம் உள்ளதால் சுவைமிகுந்த புளி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறோம். அதேபோல இப்புளிக்கு நல்ல சந்தை வாய்ப்பும் உள்ளதால், மற்ற விளை பொருட்களை விட புளி சாகுபடி எங்களுக்குப் பொருளாதார அளவிலும் கைகொடுத்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகச் சாலை விரிவாக்கத்துக்காகத் தரிசு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புளியமரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டதால், கடந்த ஆண்டுகளை விட இங்கு புளி உற்பத்தி குறைந்துள்ளது.

ஆறுதல் தரும் விலை உயர்வு: தற்போது வறட்சி காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கடந்த ஆண்டை விட இந்தாண்டு விலை உயர்ந்திருப்பது எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.

கடந்தாண்டு ஒரு கிலோ ரூ.60-க்கு (ஓடு நீக்காதது) விற்பனை செய்யப்பட்ட உரிகம் புளி, தற்போது ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE