மீண்டும் வறட்சி நிலை ஏற்படாமல் தடுக்க நீர் நிலைகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க தருமபுரி விவசாயிகள் கோரிக்கை

By எஸ்.செந்தில்

அரூர்: கோடைமழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் வறண்டு காணப்படும் அணை, ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீர் சேகரிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் கடந்த 3 மாதமாக கடும் வறட்சி நிலவி வருகிறது. நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் தென்னை மற்றும் பாக்கு மரங்களை காக்க தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி வருகின்றனர்.

நீண்ட காலத்திற்கு பின்னர் ஏற்பட்ட இந்த கடும் வறட்சியால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கோடைமழை பெய்யத் தொடங்கியுள்ளது.

6 மாதமாக மழை இல்லாமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டு தற்போது பெய்து வரும் கோடை மழை மற்றும் தொடர்ந்து வரவிருக்கும் பருவமழை, புயல் மழை உள்ளிட்டவற்றின் போது கிடைக்கும் மழைநீரை முறையாக சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடனடியாக குளம், குட்டைகள், ஏரிகள் மற்றும் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளை தூர் வாரி ஆழப்படுத்தவும், நீர் வழிப்பாதை, கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பராமரிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடைமுறை அமலில் உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று இப்பணிகளை தொடங்க வேண்டும், என விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்

இதுகுறித்து பாப்பிரெட்டிப் பட்டியைச் விவசாயி குணசேகரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சமீப காலமாக நிலவிவந்த வறட்சியால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பட்டுபோயின. குலை தள்ளிய நிலையில் இருந்த வாழை மரங்கள் நீரின்றி முறிந்துவிழுந்தன.

வாணியாறு அணை முற்றிலும் வறண்டதால் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதியை இழந்துள்ளன. கிராமப் பகுதிகளில் கால்நடைகளுக்கான மேய்ச்சல், குடிநீர், தீவனம் இல்லாமல் விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற அவல நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் உள்ள வள்ளிமதுரை அணை, வாணியாறுஅணை மற்றும் பொதியம்பள்ளம் தடுப்பணை மற்றும் வறண்டுகிடக்கும் நூற்றுக்கணக்கான ஏரிகள், குளம், குட்டைகள் ஆகியவற்றை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். மேலும், ஆக்கிரமிப்பில் உள்ள நீர்வரத்து கால்வாய்களை மீட்டெடுத்து பராமரிக்க வேண்டும்.

குடியிருப்பு மற்றும் அலுவலகங்களில் நடைமுறையில் இருந்த மழைநீர் சேமிப்புத் திட்டத்தை மீண்டும் முழு அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும். மழைநீரை சேமிக்கும் முயற்சியில் உள்ளாட்சி மற்றும் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதற்காகஅரசு தனிகவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE