‘கோவை மாவட்டத்தில் கத்திரி வெயில் தாக்கம் பெரிய அளவில் இருக்காது’ - வேளாண் பல்கலை. அதிகாரி

By செய்திப்பிரிவு

கோவை: கோவை மாவட்டத்தில் மழை வாய்ப்புள்ளதால் கத்திரி வெயில் தாக்கம் பெரிய அளவில் இருக்காதுஎன்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய துறைத் தலைவர் சத்யமூர்த்தி தெரிவித்தார்.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் 28-ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். நடப்பாண்டில் பிப்ரவரி மாதம் முதலே வெயில் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக கரூர், ஈரோட்டில் 112, 111 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகியுள்ளது.

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கத்திரி வெயில் காலத்தில் வெயில் தாக்கம் இருக்கும் என்பதால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையும், வடதமிழக உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட அதிமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவையில் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், மக்கள் நிம்மதியடைந்தனர். இது குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் துறைத் தலைவர் சத்ய மூர்த்தி கூறும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் வரும் 8-ம் தேதி மழை வர வாய்ப்புள்ளது. மழை பெய்யும்போது வெயில் தாக்கம் குறையும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE