42 யானை வழித்தடம் குறித்து வரைவு அறிக்கை வெளியீடு: குழு பரிந்துரையை அமல்படுத்த அரசுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

By ஆர்.ஆதித்தன்

கோவை: தமிழகத்தில் 42 யானை வழித்தடங்களை கண்டறிந்து வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஆனைமலை, ஸ்ரீவில்லிபுத்தூர், அகஸ்தியமலை ஆகிய 5 யானைகள் காப்பகம் உள்ளிட்ட 20 வனக்கோட்டங்களில் 2023-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2,961 யானைகள் உள்ளன. 20 யானை வழித்தடங்கள் உள்ளதாக வனத்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மனித ஆக்கிரமிப்புகளான விடுதி கட்டிடங்கள் மற்றும் விவசாயதலையீடுகள் காரணமாக யானைகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வழித்தடங்களில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் மனித-யானை மோதல் கணிசமாக உயர்ந்துள்ளதுடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இதைத் தவிர்க்க அரசு சார்பில் யானைகளின் வாழ்விடங்களை பாதுகாத்தல், நெருக்கடியான யானை வழித்தடத்தை அடையாளம் காணுதல், யானைகள் வழித்தடத்துக்கான உடனடி மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய யானைகள் வழித்தடம் திட்டம் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது.

தமிழக அரசின் வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வி.நாகநாதன் (வனஉயிரினம்) தலைமையில் வனத்துறை மற்றும் அறிவியல் நிபுணர்கள் அடங்கிய குழு சார்பில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, தமிழக யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இக்குழு, தமிழகம் முழுவதும் 42 யானைகள் வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ளது. 161 பக்கஅறிக்கையில் முக்கிய பிரச்சினைகள், யானைகள் வசிப்பிடம், முக்கியத்துவமான வழித்தட சூழல், நீர்ஆதாரம், வழித்தட அச்சுறுத்தல்கள், மேலாண்மை திட்டங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

யானை வழித்தட திட்ட அறிக்கைதமிழக அரசின் http://www.forestn.tn.gov.in/tnforestdeptpublications என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இயற்கைஆர்வலர்கள் elephantcorridorrtnfd @gmail.com என்ற மின்னஞ்சலில் தங்களது கருத்துகளை மே 5-ம் தேதி வரை அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ‘ஓசை’ அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை சீகூர் யானை வழித்தடம் குறித்து ஏற்கெனவே உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி கேளிக்கை விடுதிகளை அரசு கையகப்படுத்த வேண்டும். சில இடங்களில் நிலங்களை விலைக்கு வாங்க வேண்டியதுடன், ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். தமிழக அரசு யானை வழித்தடதிட்டக் குழு தயாரித்த பரிந்துரையை உடனே அமல்படுத்த வேண்டும்.

ஓவேலி முதுமலை யானைகள் வழித்தடத்தில் செக் ஷன் 17 மற்றும் 43-ல் ஏராளமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. எனவே மக்கள் வாழும் இடத்தையும், யானைகள் வந்து செல்லும் வழித்தடத்தையும் வரையறுக்க வேண்டும். யானைகள் வந்து போகும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்.கோவை வனக்கோட்டத்தில் ஏற்கெனவே 2 யானை வழித்தடங்கள் உள்ளன. தற்போது தாணிகண்டி - அனுவாவி-மருதமலை-மாங்கரை வரை ஒரு யானைவழித்தடமும், கல்குத்தி முதல்வாளையாறு வரையில் மற்றொரு யானை வழித்தடமும் கண்டறியப் பட்டுள்ளது.

யானைகள் மலை உச்சியில் வலசை செல்லாது. மாறாக மலை அடிவார பகுதியில் தான் செல்லும். யானை செல்லும் குறுகிய பாதை துண்டாடப்பட்டால், யானைகள் வாழ்விடம் பாதிக்கும். இதனால் மனித-யானை மோதல் தொடர்ந்து நிகழும் அபாயம் உள்ளது. மிக அவசியமாக குறுகிய பாதைகளை அரசு காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, யானைகள் வழித்தட திட்ட குழுவின் பரிந்துரைகளை அரசு விரைவாகச் செயல்படுத்த வேண்டும். கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே டெக்சிட்டி பூங்கா ஆகியவற்றை கொண்டு வருவது மனித-யானை மோதலை மேலும் அதிகரிக்கும். மேற்கு பகுதியை தவிர்த்து, சரவணம்பட்டி, பொள்ளாச்சி, அவிநாசிசாலையில் நகர விரிவாக்கத்தை மேற்கொள்ள வேண்டும். கோவை-நீலகிரியில் ஏற்கெனவே மனித-விலங்கு மோதல் அதிகமாக உள்ளது. இதை மேலும் அதிகரிக்காமல் அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

14 days ago

சுற்றுச்சூழல்

15 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

சுற்றுச்சூழல்

20 days ago

சுற்றுச்சூழல்

21 days ago

சுற்றுச்சூழல்

24 days ago

மேலும்