போர்வெல் அமைக்கும் பணியில் தருமபுரி விவசாயிகள் தீவிரம் - போதிய நீர் கிடைக்காததால் அதிர்ச்சி

By எஸ்.செந்தில்

அரூர்: அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் இருக்கும் பயிர்களை காக்க போர்வெல் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது, இப்பகுதியில் மழையின்மை மற்றும் சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் அதல, பாதாளத்திற்கு சென்று விட்டது. குளம், குட்டைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள், கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீரின்றி வறண்டுள்ளது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தோட்டங்களில் பயிரிட்டுள்ள பலவகை மரங்கள், விவசாயப் பயிர்களை காக்கவும், கால் நடைகளுக்கான குடிநீர், தீவனம் விளைச்சலுக்காகவும் கிணறுகளில் சேகதிகளை அகற்றி ஆழப்படுத்துவது, புதிதாக ஆழ்குழாய் கிணறுகளை ( போர்வெல் ) அமைப்பது போன்ற பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக போர்வெல் அமைக்கும் பணி கிராமப்புறங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. தேவை அதிகரித்துள்ளதால் உள்ளூர் போர்வெல் வாகனங்கள் மட்டுமின்றி திருச்செங்கோடு, நாமக்கல், சேலம் பகுதியில் இருந்தும் அதிகளவில் வாகனங்கள் வரவழைக்கப் பட்டுள்ளன.

இது குறித்து அரூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது: கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அரூர், பாப்பிரெட்டிப் பட்டி வட்டாரங்களில் சுமார் ஆயிரம் போர்வெல்கள் புதிதாக போடப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு சுமார் 500 அடியில் கிடைத்த தண்ணீர் தற்போது 1200 அடிவரை சென்றும் போதிய அளவில் நீர் கிடைப்பதில்லை. இதனால் செலவும் இரு மடங்காகி விட்டது.

தற்போதைய நிலையில் போர்வெல் அமைக்க மட்டும் குறைந்தது ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.2லட்சம் வரையும், அதன்பின் மோட்டார் பொருத்த, பைப் லைன் அமைக்க சுமார் ரூ.1லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையும் செலவாகிறது. அதிலும் 80 சதவீத போர்வெல்களில் எதிர்பார்த்த அளவு நீர் வரத்து இருப்பதில்லை.

இதனால், பெரும் அச்சத்துடன் போர்வெல் போட வேண்டிய நிலை உள்ளது. ஏற்கெனவே போதிய விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போர்வெல் அமைப்பதன் மூலம் மேலும் கடனாளிகளாக விவசாயிகள் மாறி வருகின்றனர். விவசாயிகளின் தற்போதைய நிலையை அரசு கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட பயிர்கள், மரங்கள் உள்ளிட்டவைகளுக்கு இழப்பீடும், பயிர்க் கடன் உள்ளிட்ட விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE