வறட்சியால் கருகும் மிளகு, காபி செடிகள் - வத்தல்மலை விவசாயிகள் வேதனை

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக வத்தமலையில் பல ஏக்கர் பரப்பளவில் இருந்த மிளகு, காபி தோட்டங்கள் கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தருமபுரி நகரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் வத்தல்மலை உள்ளது. இந்த மலை மீது சின்னாங்காடு, ஒன்றியங்காடு, குழியனூர், கொட்லாங்காடு, மன்னாங்குழி, பெரியூர், நாயக்கனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் பிரதான தொழில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான். இங்குள்ள விவசாயிகள் சிறுதானிய சாகுபடியில் மட்டுமே ஈடுபட்டு வந்த நிலையில் வேளாண் துறையினர் வழிகாட்டுதலைத் தொடர்ந்து சில்வர் ஓக் மரங்கள் வளர்த்து அதன்மீது படரும் வகையில் மிளகுச் செடிகளை நடவு செய்து வளர்க்கத் தொடங்கினர்.

அதேபோல, சில்வர் ஓக் மரங்களுக்கு இடையில் காபி, ஆரஞ்சு ஆகியவற்றையும் ஊடு பயிராக நடவு செய்துள்ளனர். இவ்வாறு சுமார் 300 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகு, காபி செடிகள் கடும் வறட்சி காரணமாக கருகத் தொடங்கியுள்ளன. இதனால் வத்தல்மலை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து வத்தல்மலையைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் கூறியது: வத்தல்மலையில் ஏக்கருக்கு சுமார் 400 சில்வர் ஓக் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. மரத்துக்கு ஒன்று வீதம் மிளகுச் செடிகளையும் நடவு செய்து வளர்க்கலாம். நடவு செய்த 3 ஆண்டுக்கு பிறகு மிளகு செடிகள் காய்க்கத் தொடங்கும். அதன் பிறகு சுமார் 40 ஆண்டுகள் வரை தொடர்ந்து பயன் தரும். ஒரு மிளகுச் செடியில் ஒரு ஆண்டுக்கு 2 கிலோவுக்கு குறையாமல் மிளகு கிடைக்கும். ஒரு கிலோ மிளகு ரூ.500 முதல் ரூ.800 வரை சீசனுக்கு ஏற்ப விற்பனையாகும்.

நவம்பர் மாதத்தில் காய்ப்பு தொடங்கி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அறுவடைக்கு வரும். அதேபோல, ஏக்கருக்கு 750 காபி செடிகள் வரை நடவு செய்யலாம். ஒரு காபி செடியில் ஒரு ஆண்டுக்கு சுமார் 3 கிலோ காபி கொட்டைகள் கிடைக்கும். சீசனுக்கு ஏற்ப ஒரு கிலோ காபி கொட்டை ரூ.300 வரை விற்பனையாகும். காபி அறுவடையும் நவம்பரில் தொடங்கி பிப்ரவரியில் முடியும். பராமரிப்புக்கு ஏற்ப லாபம் தரும் பயிர்களாக அமைந்ததால் இங்குள்ள விவசாயிகள் பலரும் சில்வர் ஓக் நடவு செய்து மிளகு, காபி, ஆரஞ்சு ஆகியவற்றையும் ஊடுபயிராக நடவு செய்து பராமரித்து வந்தோம்.

ஆனால், கடந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் நடப்பு ஆண்டில் வத்தல்மலையில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து மிளகு, காபி செடிகள் கருகத் தொடங்கி விட்டன. இதனால், இங்குள்ள விவசாயிகள் கடும் வேதனைக்கு உள்ளாகி இருக்கிறோம். மழை பெய்தாலும் கூட கருகிய செடிகளை அகற்றிவிட்டு புதிதாக நடவு செய்து மீண்டும் அறுவடை பார்க்க 4 ஆண்டுகள் தேவைப்படும். எனவே, வறட்சியால் வத்தல் மலையில் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மீண்டும் மிளகு, காபி நடவு மேற்கொள்ளவும் அரசு சார்பில் உதவிகள் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE