கோவை அருகே தனியார் ஆலையில் அமோனியா வாயுக் கசிவு: 300 குடும்பத்தினர் வெளியேற்றம்

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவை அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதால் அருகில் இருந்த வீடுகளில் வசித்து வந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து ஆலையை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் காரமடை அருகே, சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சென்னிவீராம்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொழிற்சாலை பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டு இருந்தது. இந்த தொழிற்சாலையை சமீபத்தில் அவிநாசியைச் சேர்ந்த ஆசிக் முகமது என்பவர் வாங்கினர். தொடர்ந்து அவர் இந்த தொழிற்சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்தார்.

ஒரு வாரத்துக்கு முன்னர் இந்தத் தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக தொழிற்சாலையில் தொழிலாளர்கள் சிலர் சோதனை அடிப்படையில் இயந்திரங்களை இயக்கி வந்தனர். இந்தச்சூழலில், தொழிற்சாலை வளாகத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் கெடாமல் நீண்ட நாட்கள் பயன்படுத்த பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த அமோனியா வாயுக் குழாயின் வால்வு நள்ளிரவு 12 மணியளவில் வெடித்தது. தொடர்ந்து அதிலிருந்து வாயுக் கசிவு ஏற்பட்டது . இந்த வாயு கசிந்து, அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு பரவியது.

இதனால் அப்பகுதிகளில் வசித்து வந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு கண் எரிச்சல், குமட்டல், தலைச்சுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து காரமடை காவல் துறை, வருவாய்த் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும், வாயுக் கசிவால் சிரமத்துக்குள்ளான 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மீட்கப்பட்டு, அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து இன்று காலை சென்னிவீரம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மேற்கண்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை முன்பு திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மறுபுறம், வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் மற்றும் வட்டாட்சியர் சந்திரன் ஆகியோர் மேற்கண்ட தொழிற்சாலையில் நேரில் ஆய்வு நடத்தினர். அப்போது முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட வந்த மக்கள் அதிகாரிகளையும் முற்றுகையிட்டனர். இந்த ஆலையை எந்த காரணத்தை கொண்டும் திறக்கக் கூடாது, பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர்.



இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறும்போது, “இந்த ஆலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, “மேற்கண்ட ஆலையில், எங்கள் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். வாயுக்கசிவு சில மணி நேரங்களிலேயே கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. இந்த ஆலையின் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த ஆலை மூடப்பட உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

சீல் வைக்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறும்போது, “பல வருடங்களாக மூடிக் கிடந்த இந்த ஆலையை வாங்கியவர் முறையாக அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுத்துள்ளார். வாயுக் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆலையை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இத்தொழிற்சாலையில் இருப்பில் உள்ள வாயுக்களை வெளியேற்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

15 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

19 days ago

சுற்றுச்சூழல்

22 days ago

சுற்றுச்சூழல்

23 days ago

சுற்றுச்சூழல்

22 days ago

சுற்றுச்சூழல்

23 days ago

மேலும்