நீரின்றி வறண்டு வரும் கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரி - தீர்வுதான் என்ன?

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: அதிகரித்து வரும் கோடை வெயிலால் கிருஷ்ணகிரி அருகே படேதலாவ் ஏரி நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வறண்டு வருகிறது. இதனிடையே, எண்ணேகொல்புதூர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் 269 ஏக்கர் பரப்பளவில் படேதலாவ் ஏரி (பெரிய ஏரி) உள்ளது. மழை காலக்காலக்களில் மார்க்கண்டேயன் நதியிலிருந்து கால்வாய் மூலம் இந்த ஏரிக்குத் தண்ணீர் வரும்.

50 ஆயிரம் ஹெக்டேர் பயன்: இந்த ஏரி மூலம் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட் பட்ட 9 ஊராட்சிகள் மற்றும் பர்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் உள்ள 50 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மழைக் காலங்களில் மார்க்கண்டேயன் நதியில் குறுக்கே கட்டப்பட்டுள்ள மாரசந்திரம் தடுப்பணையிலிருந்து ஏரிக்குத் தண்ணீர் வரத்து உள்ளது. மேலும், ஏரி நிரம்பி வழிந்தோடும் உபரி நீர் பர்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏரிகளுக்குச் செல்கின்றன.

இதனிடையே, கடந்த ஆண்டு போதிய மழையில்லாததால், தற்போது நிலவும் வெயில் உக்கிரம் காரணமாக படேதலாவ் ஏரியில் நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்து, வறண்ட நிலை ஏற்பட்டுள்ள நிலையில், படேதலாவ் ஏரிக்கு நீர் கொண்டு வரும் எண்ணேகொல்புதூர் கால்வாய் திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.276 கோடியில் திட்டம்: இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: எண்ணேகொல்புதூர் தடுப்பணையிலிருந்து வலது மற்றும் இடதுபுறத்தில் புதிய வழங்குக் கால்வாய் அமைத்து தென்பெண்ணை ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரைக் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு நீர் வழங்க வசதியாக ரூ.276 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, எண்ணேகொல்புதூர் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது, நீர்வரத்தின்றியும், வாட்டும் வெயில் காரணமாகவும் படேதலாவ் ஏரி நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால், இந்த நீராதார பகுதியில் பாசன நீர், குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, எண்ணேகொல்புதூர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE