கொடைக்கானலில் தொடர் காட்டு தீயால் சாம்பல் மேடாக காட்சியளிக்கும் மலை முகடுகள்

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர் காட்டுத் தீயால், மலை முகடுகள் சாம்பல் மேடாகக் காட்சியளிக்கின்றன. நான்காவது நாளாக தொடரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறை, தீயணைப்புத் துறையினர் என 300 பேர் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. மலைப் பகுதிகளில் உள்ள புற்கள், செடி கொடிகள், சிறிய மரங்கள் காய்ந்து வருகின்றன. கோடை காலத்தில் மலைப் பகுதியில் அவ்வப்போது காட்டுத் தீ பரவுவதும், அதை வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து அணைப்பதும் ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வு. ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், காட்டுத் தீயை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

குளுமை நிறைந்த பகுதிகளான கொடைக்கானல் மேல் மலைப் பகுதியிலுள்ள பூம் பாறை, கூக்கால், மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட வனப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக காட்டுத் தீ பற்றி பரவி வருகிறது. நான்காவது நாளான நேற்றும் காட்டுத் தீ பரவுவது தொடர்ந்தது. இதனால் சாலையோரம் புற்கள், செடிகள் கொழுந்து விட்டு எரிகின்றன. அடர்ந்த வனப் பகுதியில் உயர்ந்த மரங்களுக்கிடையே வெளியேறும் புகை மண்டலம் மேகக் கூட்டம் போல் காணப்படுகிறது.

வன விலங்குகளும் இடம் பெயர்ந்து வருகின்றன. தீ பரவுவது தொடர்ந்தால், மேல் மலைக் கிராம மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி யுள்ளது. சாலையோரம் செல்லும் மின் கம்பங்களும் தீயால் சேதமடைந்துள்ளதால், மலைக் கிராமங்களுக்கு மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வனத்துறை, தீயணைப்புத் துறையினருடன் மின் வாரியப் பணியாளர்கள் என மொத்தம் 300-க்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர். பசுமை போர்த்திய பகுதியாக காட்சியளிக்கும் மேல்மலைக் கிராமச் சாலைகள், மலை முகடுகளில் சாம்பல் படிந்து, தற்போது சாம்பல் மேடாக காட்சியளிக் கின்றன. விரைவில் காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்படும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE