கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத் தீ: வனப் பகுதியை விட்டு வெளியேறும் விலங்குகள்

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் தொடர்ந்து பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க வனத் துறையினர் போராடி வருகின்றனர். காட்டுத் தீயால் விலங்குகள் வனப் பகுதியைவிட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் வனப் பகுதியில் வெயிலின் தாக்கத்தால் சருகுகளில் திடீரென தீப்பற்றி, அவ்வப்போது காட்டுத் தீ பரவி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் அரிய வகை மரங்கள்,தாவரங்கள் தீயில் கருகின.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் மலைக் கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை, கிளாவரை அருகேஉள்ள வனப் பகுதிகளில் காட்டுத்தீ பரவியுள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

ஏற்கெனவே வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு விட்டதால், உணவு மற்றும் தண்ணீரைத் தேடி மான்கள், காட்டு மாடுகள் நகரப் பகுதிக்குள் நுழைகின்றன. தற்போது பற்றி எரியும் காட்டுத் தீயால், யானை, கரடி உள்ளிட்ட விலங்குகளும் வனப் பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன.

மேலும், காட்டுத் தீயால் ஏற்பட்ட புகை மண்டலம் மலைக் கிராமங்களைச சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் சுவாசிக்கவே சிரமப்படுகின்றனர். விவசாய நிலங்கள், பயிர்களின் மேல் சாம்பல் பரவிக் கிடக்கிறது.

இதுகுறித்து மலைக் கிராமத்தினர் கூறும்போது, கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து காட்டுத் தீ எரிந்து வருகிறது. வனத் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். எனினும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கோடை மழை பெய்தால்மட்டுமே தீயைக் கட்டுப்படுத்த முடியும். தீ காரணமாக விலங்குகள் வனப் பகுதியிலிருந்து வெளியேறி, குடியிருப்பு பகுதிக்குள் நுழையத் தொடங்கி உள்ளன என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE