கோடை வெயில் உக்கிரத்தால் கிருஷ்ணகிரி அணைகளின் நீர்மட்டம் தொடர் சரிவு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: கோடை வெயில் உக்கிரம் அதிகரித்துள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் நீராதாரங்களில் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனிடையே, ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 136 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 118 கனஅடியாக சரிந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 25.91 அடியாக உள்ளது.

கடந்த சில வாரங்களாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்ற நிலையில், அணையிலிருந்து பாசன கால்வாய்கள், ஊற்றுக் கால்வாய்கள் வழியாக விநாடிக்கு 116 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. வெயில் உக்கிரம் காரணமாக அணையில் தேக்கியுள்ள நீர் தினசரி 16 கனஅடி ஆவியாகி வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 39.30 அடியாக உள்ளது. இதேபோல, சூளகிரி அருகே சின்னாறு அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், அணையின் மொத்த கொள்ளளவான 32.80 அடியில் நீர்மட்டம் 2.26 அடியாக உள்ளது. வெயிலுக்குத் தினசரி 0.07 கனஅடி ஆவியாகி வருகிறது.

ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீர்மட்டம் 4.40 அடியாக உள்ளது. அணையிலிருந்து கால்வாயில் விநாடிக்கு 40 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாரூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், மொத்த கொள்ளளவான 15.60 அடியில் நீர்மட்டம் 3.80 அடியாக உள்ளது. கோடை வெயில் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE