அரூர் பகுதியில் மா விளைச்சல் பாதிப்பு - கடும் வெயிலால் மாங்காய்கள் உதிர்வதால் விவசாயிகள் கவலை

By எஸ்.செந்தில்

அரூர்: அரூர் பகுதியில் 3-வது ஆண்டாக மா விளைச்சல் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடும் வெயிலால் மாங்காய்கள் உதிர்ந்து விட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப் பட்டி, மொரப்பூர், கடத்தூர் சுற்றுப்புற பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாமரங்கள் உள்ளன. குறிப்பாக, மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள சித்தேரி, மஞ்சவாடி, காளிப்பேட்டை, சாமியாபுரம், பாப்பம்பாடி, தாதம்பட்டி, சின்னாங்குப்பம், அச்சல்வாடி, கீரைப்பட்டி, தீர்த்தமலை, கம்பைநல்லூர், அனுமன் தீர்த்தம், ராமியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செந்தூரா, பெங்களூரா, அல்போன்சா, சர்க்கரை குட்டி, மல்கோவா, பீத்தர், காதர் என 15-க்கும் மேற்பட்ட ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன.

இங்கு அறுவடை செய்யப்படும் பழங்கள் உள்ளூர் மார்க்கெட் தவிர மாம்பழ கூழ் தொழிற்சாலைகளுக்காக கிருஷ்ணகிரிக்கும், விற்பனைக்காக சேலம், பெங்களூருவுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மாமரங்களில் காய் பிடிக்கும் நேரத்தில் பெய்த தொடர் மழை மற்றும் நோய் தாக்குதல் உள்ளிட்டவற்றால் 40சதவீதம் அளவுக்கு மா விளைச்சல் பாதிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக மழையால் இழப்பை சந்தித்த மா விவசாயிகள் நிகழாண்டு கடும் வெயிலால் இழப்பை சந்தித்துள்ளனர்.

நிகழாண்டு போதிய மழையின்மையால் பருவம் தவறி பூ பூத்தது. மேலும், மார்ச் மாத இறுதி வரை கடும் பனிப் பொழிவு இருந்தது. தொடர்ந்து கடுமையான வெயில் நிலவி வருகிறது. இதனால் மா மரங்களில் பூக்கள், பிஞ்சுகள் கருகி உதிர்ந்தன. மேலும், கோடை மழை பெய்யாததால் காய்கள் போதிய வளர்ச்சியின்றி சிறுத்து, வெதும்பி விழத்தொடங்கியுள்ளன. இதனால் இவ்வாண்டும் மா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வழக்கத்திற்கு மாறான பனிப் பொழிவு, கோடை வெயில் என சீதோஷ்ண நிலை மாறுதல் காரணமாக மா விளைச்சல் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. வழக்கமாக தற்போதைய பருவத்தில் பிஞ்சுகள் காய்களாக மாறி பழுக்கத் தொடங்கும். ஆனால் போதிய பிஞ்சுகள் இல்லாத நிலையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக இருக்கும் ஒருசில பிஞ்சுகளும் வெதும்பி விழுந்துவிட்டன. பல்வேறு மரங்களில் காய்கள் இல்லாததால் புதியதாக இலைகள் துளிர் விடத் தொடங்கி விட்டன. இதனால் இவ்வாண்டு அரூர் சுற்றுப் பகுதியில் மா விளைச்சல் வெகுவாக குறையும், என்றனர்.

மஞ்சவாடி பகுதி மா விவசாயி பெருமாள் ( 56 ) கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக மாம்பழ விளைச்சல் பெரும் நஷ்டத்தில் உள்ளது. வழக்கமாக வியாபாரிகள் மா மரங்களை குத்தகைக்கு எடுத்துக் கொள்வார்கள். தொடர் வருவாய் இழப்பால் இவ்வாண்டு வியாபாரிகள் குத்தகைக்கு கேட்க வில்லை. அதற்கேற்ப இம்முறையும் விளைச்சல் இல்லை என்பது விவசாயிகளிடையே பெரும் கவலையை உண்டாக்கியுள்ளது, என்றார். போதிய பிஞ்சுகள் இல்லாத நிலையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக இருக்கும் ஒருசில பிஞ்சுகளும் வெதும்பி விழுந்துவிட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

மேலும்