மயிலாடுதுறை பகுதியில் 5 நாட்கள் ஆகியும் சிக்காத சிறுத்தை!

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையைக் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வனத் துறையினர், அந்த சிறுத்தை நீர்வழி பாதைகளை அதிகம் பயன்படுத்துவதைக் கண்டறிந்துள்ளனர்.

மயிலாடுதுறை நகரில் செம்மங்குளம் பகுதியில் ஏப்.2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்தனர். இதையடுத்து, வனத் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறையினர் வந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சிறுத்தையை தேடும் பணியைத் தொடங்கினர். பின்னர், அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காட்டுப் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாகக் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதியில் கூண்டுகள் வைத்து சிறுத்தையைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை வனத் துறையினர் மேற்கொண்டனர். மேலும் சித்தர்காடு, ஆரோக்கியநாதபுரம், அசிக்காடு, மறையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டதுடன், தெர்மல் ட்ரோன் கேமரா மூலமும், மோப்ப நாய்கள், வேட்டை நாய்கள் உதவியுடனும் தீவிர தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, செம்மங்குளம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாடுவது ஏப்.3-ம் தேதி இரவு பதிவாகியிருந்தது.

இதையடுத்து, மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவது சிறுத்தைதான் என்பது வனத் துறையினரால் உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குத்தாலம் அருகேயுள்ள காஞ்சிவாய் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததைப் பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில், வனத் துறையினர் நேற்று அங்கு சென்று ஆய்வு செய்தனர். மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள இந்த காஞ்சிவாய் பகுதியில் அடுத்தக்கட்டமாக தேடுதல் பணியை வனத் துறையினர் மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் அபிஷேக் தோமர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது: கடந்த 3 நாட்களாக நடைபெற்ற சிறுத்தை நடமாட்டம் குறித்த ஆய்வுகளின் அடிப்படையில், சிறுத்தை நீர்வழிகளை அதிகமாக பயன்படுத்துவதை அறிய முடிகிறது. முக்கியமாக மயிலாடுதுறை சுற்றுப்பகுதியில் உள்ள மஞ்சளாறு, மகிமலையாறு, பழைய காவிரி ஆற்றுப் பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டத்துக்கான அறிகுறிகள் காணப்பட்டன. அதனடிப்படையில், அப்பகுதிகளில் 7 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, 15 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 30 தானியங்கி கேமராக்கள் வரவழைக்கப்பட்டு, அவற்றை சரியான இடங்களில் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள காவிரி ஆற்றுப் பாலத்தின் அருகில் சிறுத்தையின் எச்சம் கிடைக்கப் பெற்றது. அது உரிய சோதனைக்காக சென்னை வண்டலூரில் உள்ள உயர் தொழில்நுட்ப வனஉயிரின மையத்துக்கு அனுப்பப்படுகிறது.

இதுவரை சேகரித்த தகவல்களின் அடிப்படையில், பழைய காவிரி, மஞ்சளாறு ஆகியவற்றுக்கு உட்பட்ட பகுதிகளின் நீர்வழி புதர்களிலேயே அச்சிறுத்தை இருக்கலாம் என்று அறியமுடிகிறது. அதற்கேற்றவாறு கண்காணிப்பு குழுக்கள் தணிக்கை மேற்கொள்வதற்கும், கூண்டுகளை இடமாற்றம் செய்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

மேலும்