வேப்பனப்பள்ளி பகுதியில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி தோட்டப் பயிர்களை பராமரிக்கும் விவசாயிகள்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி பகுதியில் நிலவும் வறட்சியால், தண்ணீரை விலை கொடுத்து வாங்கி தோட்டப் பயிர்களை விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பெய்த மழையால் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கோடை காலத்திலும் தண்ணீர் வற்றாமல் இருந்தது.

குறிப்பாக தமிழகம் மற்றும் ஆந்திர மாநில எல்லையில் பெய்த மழையால் மார்க்கண்டேயன் நதி, குப்தா ஆறு மற்றும் இதன் நீர் ஆதாரத்தை அடிப்படையாக கொண்ட ஏரி, குளம், குட்டைகள் நிரம்பின.

இதனால், இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு இல்லாத நிலை நிலவியது. இந்நிலையில், கடந்தாண்டு (2023) தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.

இதையடுத்து, இப்பகுதி நீர் நிலைகள் வறண்டன. தற்போது, கோடை வெயில் உக்கிரம் அதிகரித்துள்ள நிலையில் நீர் ஆதாரங்களில் நீரின்றி வறட்சி நிலவி வருகிறது.

கடந்த 3 ஆண்டாக மானாவாரி பாசன நீர் தேவையும் பூர்த்தியான நிலையில் பல விவசாயிகள் தோட்டப் பயிர்களை அதிக அளவில் நடவு செய்துள்ளனர். தற்போதைய வறட்சியால் மா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட செடிகள் காய்ந்து சருகாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேப்பனப் பள்ளி பகுதி விவசாயிகள் சிலர் கூறியதாவது: எங்கள் பகுதியில் கட்ந்த 3 ஆண்டுகளாக பருவ மழை கை கொடுத்தது. இதனால், இறவை மற்றும் மானாவாரி விவசாயத்துக்கு நீர் தேவை பூர்த்தியானது. கடந்தாண்டு, பருவ மழை பொய்த்தது. இதனால், தற்போது வறட்சி நிலவி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் நடவு செய்யப்பட்ட தோட்டப் பயிர்களான மா உள்ளிட்ட பலவகை பழச்செடிகள் மற்றும் மரங்களை காக்க நீர் ஆதாரம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள கிணறுகளிலிருந்து தண்ணீர் ரூ.800 முதல் ரூ.1,500 வரை விலை கொடுத்து வாங்கி டிராக்டரில் கொண்டு வந்து ஊற்றி பராமரித்து வருகிறோம்.

வரும் நாட்களில் கோடை மழை பெய்யவில்லை என்றால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மழைக் காலங்களில் தண்ணீரை சேமிக்க தொலைநோக்குடன் கூடிய நீர்மேலாண்மை திட்டத்தை நீர் வளத்துறையினர் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE