அரூர் வனப்பகுதியில் கடும் வறட்சி: தண்ணீர் தேடி ஊருக்குள் வந்து உயிரிழக்கும் மான்கள்

By எஸ்.செந்தில்

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் பகுதி வனப்பகுதிகளை அதிகம் கொண்டது. வனப்பகுதியில் மான்கள், காட்டுப் பன்றிகள், முயல்கள், குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்கினங்கள் அதிகளவில வசித்து வருகின்றன.

அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் இவ்விலங்குகள் அங்குள்ள உணவு மற்றும் குடிநீரை பயன்படுத்தி வாழ்ந்து வந்தன. ஆனால், தற்போது மழை பொய்த்ததன் காரணமாக வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில் காப்புக்காடுகறில் உள்ள நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால், வன விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவுத் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் நுழைகின்றன.

அவ்வாறு வரும் விலங்குகள் சில நேரங்களில் வாகனங்களில் அடிபட்டும், நாய்களிடம் சிக்கியும் உயிரிழந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் பொம்மிடி பில்பருத்தி பகுதியில் குடிநீர் தேடி வந்த 2 மான்கள் நாய்கள் கடித்ததில் உயிரிழந்தன. நேற்று முன்தினம் கடத்தூர் அருகே நீர் தேடி ஊருக்குள் புகுந்த மான் கிணற்றில் விழுந்து பின்னர் மீட்கப்பட்டது. ஆத்தூர் பாலம் அருகே தண்ணீர் தேடி வந்த இரண்டரை வயது மான் கிணற்றில் விழுந்து இறந்தது. இதே போன்று கேத்துரெட்டிப்பட்டி, அய்யம்பட்டி, தாதனூர் புதூர் பகுதியில் தலா 1 என மூன்று மான்கள் கிணற்றில் விழுந்தன. இக்கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் அடிபட்டு உயிரிழந்தன.

தொடர்ந்து குண்டல்மடுவு பகுதியில் நேற்று காலை தண்ணீர் தேடி வந்த மானை நாய்கள் விரட்டின. இதையறிந்த வனத்துறையினர் மானை பிடித்து கவரமலை பகுதியில் விட்டனர். குறிப்பாக, அரூர் நகரையொட்டி அமைந்துள்ள குரங்குப்பள்ளம் வனப்பகுதியில் நூற்றுக் கணக்கான மான்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மான்கள் கூட்டம் கூட்டமாக வனத்தை விட்டு வெளியேறி சாலையோரப் பகுதிகளுக்கு வருவதும், குடியிருப்பு பகுதிகளில் நடமாடுவதும் அதிகரித்துள்ளது. மாலை வேளைகளில் சாலையோரம் ஆடு, மாடுகள் போன்று சாதாரணமாக அச்சமின்றி மான்கள் நடமாடுகின்றன. இதனை அவ்வழியே செல்லும் மக்கள் நின்று ரசித்தபடி செல்போனில் போட்டோ எடுத்துச் செல்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் மோகன சுந்தரம் கூறுகையில், மான்கள் வனத்தை விட்டு மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடமாடுவது அவற்றின் உயிருக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளது. நாய்கள் கடிப்பதும், சில இடங்களில் மக்கள் இறைச்சிக்காக கொல்வதும், குடிநீருக்காக கிணற்றில் விழுந்து உயிரிழப்பதும் அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் விலங்குகளுக்காக பல லட்சம் செலவில் குடிநீர் தொட்டிகள், ஆழ்துளை கிணறுகள், அமைத்து நீர் தேவைகளுக்காக வனத்துறையினர் செலவு செய்வதாக தெரிய வரும் நிலையில்,விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உயிரிழப்பது அதிர்ச்சியை தருகிறது. இதனை விரைந்து தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசும், வனத்துறையும் எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE