500 ஏக்கர் மானாவாரி மாந்தோட்டங்களில் பூக்கள், காய்கள் உதிர்ந்து சருகாகிப் போன மரங்கள் @ நாகரசம்பட்டி

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் மட்டம் சரிவால் கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி பகுதியில் 500 ஏக்கர் மானாவாரி தோட்டங்களில் மாமரங்களில், இலைகள், பூக்கள், காய்கள் உதிர்ந்து சருகாகிப் போனது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இறவை மற்றும் மானாவாரி நிலங்களில் 35 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தென்பெண்ணை ஆற்றுப் படுகை மற்றும் ஏரி கால்வாய் பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரத்தைக் கொண்டு மானாவாரியில் 20 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது.

பருவ நிலைக்கு ஏற்ப மாறுபடும் மகசூல்: இங்கு ஏற்றுமதிக்கு ஏற்ற மா ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுவதுடன், மாங்கூழ் உற்பத்தியும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனால், மா விவசாயம் மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

மா மகசூலைப் பொறுத்தவரைப் பருவ நிலைக்கு ஏற்ப மாறுபட்டுக் காணப்படும். இதனால், ஆண்டுதோறும் மா உற்பத்தியைக் கணிக்க முடியாது. இந்நிலையில், கடந்த சில ஆண்டாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம், நோய் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் மா மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாகரசம்பட்டி பகுதியில் நிகழாண்டில் போதிய மழையின்றி மானா வாரி தோட்டங்களில் உள்ள மாமரங்களில் இலைகள், காய்கள், பூக்கள் உதிர்ந்து மரங்கள் சருகாகிப்போனதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

நீர் மேலாண்மையில் தவறு: இது தொடர்பாக கிருஷ்ணகிரி அணை இடதுபுற கால்வாய் நீட்டிப்பு பயனாளிகள் சங்கத்தின் தலைவர் சிவகுரு கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு ( 2023 ) வட கிழக்கு பருவமழை முற்றிலும் குறைந்தது. இதனால் ஏரி, குளங்கள், கிணறுகளில் நீர்மட்டம் சரிந்துள்ளது. மேலும், பிப்ரவரி மாத தொடக்கத்திலிருந்தே அதிகாலையில் பனியின் தாக்கமும், தொடர்ந்து வெயிலின் தாக்கமும் அதிகரித்ததால் மாமரங்களில் பூக்கள் கருகின. குறிப்பாக, பாளேகுளி - சந்தூர் ஏரி வரையுள்ள 28 ஏரிகளுக்கு கிருஷ்ணகிரி அணையின் உபரிநீரை உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கவில்லை. நீர் மேலாண்மையைச் சரியாகச் செய்திருந்தால், இப்பகுதிகளில் மானாவாரி மா மரங்களில் மகசூல் சீராக இருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை: ஆனால், நாகரசம்பட்டி, பாளேகுளி, வீரமலை, வேலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் மா மரங்களில் இலைகள், காய்கள், பூக்கள் உதிர்ந்து சருகாகிப்போனது. மீதமுள்ள மரங்களில் மா மகசூல் 50 சதவீதத்துக்கும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், சில விவசாயிகள் டிராக்டர் மூலம் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி மரங்களுக்கு ஊற்றி மரங்களை பாதுகாக்க போராடி வருகின்றனர். எனவே, நீர் கடத்தும் திறன் அதிகரிக்கும் வகையில் பாசன கால்வாய்களை விரிவுபடுத்த வேண்டும். மேலும் மழைக்காலங்களில் கிருஷ்ணகிரி அணை உபரிநீரை ஏரிகளுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் நீர் மேலாண்மையை முறைப்படுத்த வேண்டும்.

ஆய்வுக் கூட்டம்: காய்ந்து சருகாகியுள்ள மாமரங்கள் மற்றும் மகசூல் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக தோட்டக்கலைத் துறையினர் கூறும்போது, “பருவ நிலை மாற்றத்தால் மானாவாரி தோட்டங்களில் மா மரங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. இது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE