ஆனந்தூரில் பழுதான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தல்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: ஆனந்தூரில் பழுதான குடிநீர் சுத்திகரிப்பு நிலைய இயந்திரத்தை சரி செய்து தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் ஆனந்தூர். இக்கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆனந்தூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் கிராம மக்களுக்கு குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கில், மத்திய அரசின், பிரதான் மந்திரி கனஜ் ஷேத்ர கல்யாண யோஜனா திட்டத்தின் கீழ், மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியின் மூலம் ரூ.7.50 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு மையம், கடந்த 2018-19ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

20 லிட்டர் குடிநீர் ரூ.5-க்கு: இதன் மூலம் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.5-க்கு விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சுத்திகரிப்பு இயந்திரம் பழுது ஏற்பட்டது. இதனை சீரமைக்காமல் தனியாரிடம் பராமரிப்பு வழங்குவதாக கூறி நோட்டீஸ் ஓட்டியுள்ளனர். இதனால், அதிக விலைக்கு குடிநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

10 லிட்டர் குடிநீர் ரூ.5-க்கு: இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மூலம் கிராம மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது. இயந்திர கோளாறு காரணமாக சுத்திகரிப்பு நிலையத்தை அடைத்துள்ளனர். இதனால், சுத்திகரிக்கப்பட்ட ஒரு கேன் (20 லிட்டர்) தண்ணீர் ரூ.30-க்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும், ஆனந்தூர் ஊராட்சி நிர்வாகத்தினர், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பராமரிப்பு செலவு மற்றும் நிர்வாகிக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரச்சினைகளால் நிர்வாகிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திற்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். மேலும், வருகிற 3-ம் தேதி முதல் 10 லிட்டர் குடிநீர் ரூ.5-க்கு வழங்கப்படும் என குறிப்பட்டுள்ளனர்.

ஊராட்சி நிர்வாகமே பராமரிக்க: பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தில் 20 லிட்டர் தண்ணீர் வழங்குவதை தனியாரிடம் விட்டு 10 லிட்டராக குறைத்துள்ளனர். எனவே, பழுதான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீர் செய்து, பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைக்காமல் ஊராட்சி நிர்வாகமே தொடர்ந்து மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE