தாமிரபரணியில் 36 சிற்றின மீன்கள் - கணக்கெடுப்பில் தகவல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: தாமிரபரணியில் 36 சிற்றினங்களைச் சேர்ந்த மீன்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. தாமிரபரணி நிலப்பரப்பில் மக்களை ஈடுபடுத்தி பல்லுயிர் தரவுகளை சேகரித்தல் மற்றும்பல்லுயிர் வளங்களை பாதுகாக்கும் மக்கள் அறிவியல் திட்டத்தை மணிமுத்தாறில் இயங்கி வரும் ஏட்ரியின் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு,பூனைப் பருந்துகள் கணக்கெடுப்பு மற்றும்அந்துப் பூச்சிகள் கணக்கெடுப்பு போன்றவைமேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வரிசையில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் ஆழ்வார்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையம்மற்றும் விலங்கியல் துறை, பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி ஆகியவற்றோடு இணைந்து தாமிரபரணி மீன்கள் கணக்கெடுப்பு நடந்தது. இதுதொடர்பாக ஒருங்கிணைப்பாளர் மு.மதிவாணன் கூறியதாவது:

இக்கணக்கெடுப்பை, 50 மாணவர்கள், 7 குழுக்களாக பிரிந்து பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், கோபாலசமுத்திரம், சீவலப்பேரி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் மேற்கொண்டனர். இதில், 36 சிற்றினங்களைச் சார்ந்த 1,197 மீன்கள் பதிவு செய்யப்பட்டன.

அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 17 சிற்றினங்களும், கல்லிடைக்குறிச்சியில் 16 சிற்றினங்களும் பதிவு செய்யப்பட்டன. மற்ற இடங்களில் 13 முதல் 15 மீன் இனங்கள் பதிவு செய்யப்பட்டன. வைகுண்டம் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான 415 மீன்கள் பதிவு செய்யப்பட்டன.

கண்டறியப்பட்ட 36 மீன் இனங்களில், 31 இனங்கள் இயல் மீன் இனங்கள் ஆகும். குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் மட்டுமே காணப்படும் ஓரிட வாழ்வி மீன் இனமான டாக்கின்சியா தம்ப்ரபர்னி (சேவல் சிறு கெண்டை), ஹைப்செலோபார்பஸ் (கூர்மூக்கன்), ஹைபோர்ஹாம்பஸ் குயோய் (அரை மூக்கு கொக்கு மீன்) மற்றும் ஓடை கெளிறு ஆகிய மீன் இனங்கள் பதிவாகின.

மீன்கள் கணக்கெடுப்பின் போது பாபநாசம் பகுதியில் நீர் நாய்கள் காணப்பட்டன. இது போன்ற உயிரினங்கள்தான் தாமிரபரணியை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டுள்ளன. சிலர் வெடி வீசியும், சுண்ணாம்பு கரைசல் பயன்படுத்தியும் கண்ணியமற்ற முறையில் மீன்களை பிடிப்பது தெரிய வருகிறது.

இவற்றை தடுக்க உடனடியான நடவடிக்கைகள் தேவை. மாசுபாடு, ஆக்கிரமிப்பு உயிரினங்கள் மற்றும் கண்ணியமற்ற செயல்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால் மட்டுமே தாமிரபரணி மீன் இனங்களை மீட்டெடுக்க முடியும். இவ்வாறு தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE