காட்டுத் தீயில் தாவரங்கள் கருகியதால் பசுமை இழந்த கொடைக்கானல் வனப் பகுதி

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் காட்டுத் தீயில் மரங்கள், தாவரங்கள் கருகியதால் வனப் பகுதிகள் பசுமை இழந்து காணப்படுகிறன.

கொடைக்கானல் மலைப் பகுதியில் கோடைகாலத்தில் வனப் பகுதியில் காய்ந்த சருகுகளில் காட்டுத்தீ அவ்வப்போது பற்றிஎரிவது வழக்கம். இந்த ஆண்டுகோடைக்கு முன்பே கொடைக்கானல் மலைப் பகுதியில், தரைப்பகுதியை போல் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.

பகலில் அதிகபட்சமாக 24 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ், இரவில் 15 முதல் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. வெயிலின் தாக்கத்தால் அடிக்கடி காய்ந்தசருகுகளில் தீப்பற்றி, காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதில் பல ஏக்கர் பரப்பில் அரிய வகை மரங்கள், தாவரங்கள் கருகி வருகின்றன. இதனால் வனப் பகுதிகள் பசுமை இழந்து காணப்படுகிறன.

வெயிலில் இருந்து தப்புவதற்காகவும், குளுமையை அனுபவிக்கவும் கொடைக்கானலுக்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள், வழிநெடுகிலும் கருகி கிடக்கும் வனப் பகுதியை பார்த்து வேதனைஅடைகின்றனர்.

தீத்தடுப்புக் காவலர்கள்: இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றியதும்,உடனடியாக அதை அணைப்பதற்கும் தீத்தடுப்புக் காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேவையான இடங்களில் தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோடை மழை பெய்தால் காட்டுத்தீ பரவுவது தடுக்கப்படும். மேலும், வனப் பகுதியின் வறட்சித் தன்மை மாறி, பசுமை திரும்பத் தொடங்கும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE