குளிர் முடிந்ததும் கடும் கோடை போன்ற வெப்பம்! - இந்தியாவில் எங்கே போனது வசந்தம்? - ஓர் ஆய்வறிக்கை

By செய்திப்பிரிவு

காற்று, மழை, குளிர், வசந்தம், கோடை என பருவங்கள் பல வந்துபோவதுதான் இந்திய தேசத்தின் இயல்பு, ஆனால் குளிருக்குப் பின் கடும் கோடை போல் இயல்புக்கு மாறான வெப்பம் நிலவுகிறது. புவி வெப்பமயமாதl காரணத்தினால் இந்தியாவில் குளிருக்குப் பின் வரும் குறுகிய வசந்த காலம் மாயமாகியுள்ளது என்கிறது ஓர் ஆயவ்றிக்கை, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் க்ளைமேட் சென்ட்ரல் (Climate Central) அமைப்பு இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சாமானியர்களும் வெகு எளிதாக கண்கூடாகப் புரிந்து கொள்ளும் வகையில் பருவம் தவறிய மழையும், குளிர் காலத்தில் வழக்கத்தைவிட குறைந்த குளிர் பதிவாவதும், கோடை காலம் முன் கூட்டியே தொடங்குவதும் என பல நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை அறிவியல் பூர்வமாக புள்ளிவிவரங்களோடு உணர்த்தும் வகையில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

1850-ல் இருந்து சர்வதேச சராசரி வெப்பநிலை 1.3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்த சர்வதேச சராசரி வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியது. உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 அறியப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதற்கு, நிலக்கரி, இயற்கை எரிவாயுக்களை எரிப்பதால் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு அதிகரிப்பதே பிரதானக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் இந்த ஆண்டு (2024) குளிர்காலம் வழக்கத்தைவிட கதகதப்பாக இருந்தது குறித்து ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்த ஆய்வை மேற்கொள்ள முக்கியக் காரணம் உலகளாவிய காலநிலை போக்குகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்பபடுத்துதலே எனக் குறிப்பிடுகிறது க்ளைமேட் சென்ட்ரல். இதற்காக, இந்தியாவில் டிசம்பர் - பிப்ரவரி இடையேயான குளிர்கால நிலவரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாத சராசரி வெப்பநிலை கண்காணிக்கப்பட்டது.

அதிகப்படியான புவி வெப்பமயமாதல் நடந்த 1970 முதல் இப்போது வரையிலான காலகட்டத்தை காலகட்டத்தை கருத்தில் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் ஒவ்வொரு மாதமும் நிகழ்ந்த வெப்பமயமாதலின் வேகத்தைப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல் ஒவ்வொரு மூன்று மாதங்களைக் கொண்ட பருவகாலத்துக்கான வெப்பநிலையும் பதிவு செய்யப்பட்டது. அதன்படி வெப்பமயமதாலின் வேகத்தை மாநில சராசரியாக ஒப்பிட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் படி நிறைய இந்தியர்கள் வசந்தகாலம் என்ற ஒன்றே தென்படாத அளவுக்கு குளிர் காலத்தில் இருந்து கோடை போன்ற கடும் வெப்பம் கொண்ட காலம் வந்துவிட்டது என்றனர். இதனை க்ளைமேட் சென்ட்ரல் தான் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த புள்ளிவிவரங்களோடு விளக்குகிறது.

1. இந்தியா முழுவதும் குளிர்காலத்தில் நிலவிய கூடுதல் கதகதப்பு: இந்தியா முழுவதும் ஒவ்வொரு பகுதியிலுமே கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குளிர் காலத்தில் அதிக கதகதப்பு இருந்துள்ளது புலப்படுகிறது. மணிப்பூரில் தான் இது மிகவும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. அதாவது குளிர்காலத்தில் மணிப்பூரில் வழக்கத்தைவிட 2.3 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை அளவு அதிகரித்துள்ளது. டெல்லியில் 0.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செய்யப்பட்ட ஆய்வில் டெல்லியில் வெப்ப சராசரி அதிகரிப்பு சற்றே குறைந்து காணப்படுகிறது.

2. குளிர்காலத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வெப்பநிலை மாற்ற முறை: இந்த குளிர்காலத்தில் அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலை பதிவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காண முடிந்தது எனக் கூறுகிறது க்ளைமேட் சென்ட்ரல்.

நாட்டின் தென்பகுதியில் டிசம்பரில் வழக்கத்தைவிட குளிர் மிகவும் குறைவாக பதிவானது. பிறபகுதிகளைப் பொறுத்தவரை சிக்கிம் மாநிலத்தில் வழக்கத்தைவிட 2.4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், மணிப்பூரில் 2.1 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை இருந்தது. டிசம்பர், ஜனவரி காலகட்டத்தில் வட மாநிலங்களில் குளிர் வழக்கம்போல் அதிகமாக இல்லை. டெல்லியில் டிசம்பரில் ஒருமுறை -0.8 டிகிரி செல்சியஸ், ஜனவரியில் ஒருமுறை -0.2 டிகிரி செல்சியஸ் என்றளவில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது.

வெப்பமயமாதல் விகிதத்தைப் பொறுத்தவரையில், டிசம்பரில் லடாக்கில் 0.1 டிகிரி செல்சியஸ் பதிவானது, ஜனவரியில் உத்தரப் பிரதேசத்தில் -0.8 டிகிரி செல்சியஸ் பதிவானது. இவைதான் இந்த காலகட்டத்தின் குறைந்தபட்ச வெப்பமயமாதல் விகிதமாக அறியப்படுகிறது. ஜனவரியில் இருந்து பிப்ரவரி செல்லச் செல்ல நாடு முழுவதுமே வெப்பமயமாதல் விகிதம் வேகமாக அதிகரித்தது. ஜம்மு காஷ்மீரில் 3.1 டிகிரி செல்சியஸ் என்றளவில் அதிகபட்ச வெப்பமாயதல் உணரப்பட்டது.

3. வெப்பநிலையில் அதிரடி மாற்றங்கள்: குளிர்காலத்தின் பின்பகுதியில் வெப்பநிலையில் அதிரடி மாற்றங்கள் பல பதிவாகியதாக அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. வட இந்தியாவில் ஜனவரியில் குளிர்ச்சியான அல்லது மிதமான வெப்பமயமாதல் பதிவானது. பிப்ரவரியில் வெப்பமயமாதல் வலுவாகப் பதிவானது. ஜனவரி கடைசியில் இருந்தே வட இந்தியப் பிராந்தியங்களில் சில்லென்ற குளிர்கால நிலையில் இருந்து மார்ச் போன்ற அதிக கதகதப்பான வெப்பநிலைக்கு திடீர் மாற்றம் அதிரடியாக ஏற்பட்டது.

நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜனவரி - பிப்ரவரி காலகட்டத்தில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிரடி மாற்றம் பதிவானது. ராஜஸ்தான், ஹரியாணா, டெல்லி, உத்தரப் பிரதேசம், லடாக், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட் மாநிலங்களில் இந்த அதிரடி மாற்றம் பதிவானது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது குளிர் காலம் முடிந்து கடும் கோடை வருவதற்கு இடைப்பட்ட வசந்த காலம் இந்தியாவில் மாயமானது என்றே கூட சொல்லலாம் என்கிறது அந்த ஆய்வறிக்கை.

இவற்றின் அடிப்படையில் க்ளைமேட் சென்ட்ரலலின் துணைத் தலைவர் டாக்டர்.ஆண்ட்ரூ பெர்ஷிங், ஜனவரியில் மத்திய, வட இந்திய மாநிலங்களில் நிலவிய குளிரும் அதற்குப் பின்னர் பிப்ரவரியில் ஏற்பட்ட வெப்பமயமாதலும் நாடு முழுவதையும் குளிருக்குப் பின் வசந்தம் இல்லாமல் கோடை என்ற நிலைக்குத் தள்ளியுள்ளது. நிலக்கரி, எண்ணெய் என எரித்து கரியமில வாயுக்களை வெளியேற்றி மக்கள் இந்த புவியை சூடாக்கியுள்ளனர். அதன் விளைவுதான் இப்போது இந்தியாவில் எல்லா பருவங்களில் கதகதப்பான தட்பவெப்பமே இயல்பு என்ற சூழலை ஏற்படுத்தி வருகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE