ஏற்காடு, குரும்பப்பட்டி காப்புக்காடுகளில் காட்டுத் தீ போராடி அணைப்பு

By செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தை அடுத்துள்ள ஏற்காடு, குரும்பப்பட்டி வனச்சரக பகுதிகளில் ஏற்பட்டிருந்த காட்டுத் தீயை, வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சேலத்தை அடுத்துள்ள சேர்வராயன் மலைத் தொடரில் சேர்வராயன் தெற்கு வனச்சரகம், ஏற்காடு வனச்சரகம் உள்ளிட்டவை தொடர்ச்சியாக அமைந்துள்ளன. இவற்றில் சேர்வராயன் தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட குரும்பப்பட்டி காப்புக்காடு, ஏற்காடு மலைப் பாதையில் 40 அடி பாலத்தை ஒட்டிய காப்புக் காடு ஆகியவற்றில் நேற்று முன்தினம் மாலையில் ஆங்காங்கே திடீரென தீப்பற்றியது.

தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவி, உதவி வனப்பாதுகாவலர் செல்வகுமார், வனச்சரகர் துரைமுருகன், வனவர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும், வனத்துறை ஊழியர்கள், தீத்தடுப்பு காவலர்கள், வன உரிமைக்குழுவினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர், காட்டுத் தீ ஏற்பட்ட இடங்களுக்குச் சென்று, தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். வனத்துக்குள் தீயணைப் புத்துறை வாகனம் செல்ல முடிந்த இடம் வரையிலும், தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் வனத்துறையினர் நேரடியாக உள்ளே சென்று, பசுமையான செடிகளை பயன்படுத்தி தீயை அணைத்து வந்தனர். இதில், ஓரளவு தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இரவில் தீயணைப்பு பணி நிறுத்தப்பட்டது. பின்னர், மீண்டும் நேற்று அதிகாலையில் தீயை அணைக்கும் பணி தொடங்கப்பட்டு, ஒட்டுமொத்த தீ கட்டுப்படுத்தப்பட்டது.

இது குறித்து வனத்துறையினர் கூறியது: கோடையின் தாக்கம் சற்று முன்னரே தொடங்கி விட்டதால், வனப்பகுதியில், மரத்தின் இலைகள் அதிகளவில் உதிர்ந்து காணப்பட்டன. சில இடங்களில் மூங்கில் மரங்களும் காய்ந்த நிலையில் இருந்தன. குரும்பப்பட்டி காப்புக்காடு, ஏற்காடு காப்புக்காடு என ஆங்காங்கே தீ விபத்து ஏற்பட்டதால், வனப்பகுதிக்குள் நுழைந்தவர்களில் எவரேனும் தீ ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். தற்போது, தீயை முற்றிலும் கட்டுப்படுத்திவிட்டோம், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE