தண்ணீர் தேடி இடம்பெயரும் மான்கள்: அவிநாசியில் நாய்களாலும், விபத்தாலும் மடியும் அவலம்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் கோதபாளையம், புதுப்பாளையம், சாமந்தன்கோட்டை, வண்ணாற்றங்கரை பகுதிகளில் மான்கள் அதிகளவில் உள்ளன. துலுக்கமுத்தூர், வாகராயம்பாளையம் தொடங்கி பச்சாம்பாளையம் வரை, செம்மாண்டாம்பாளையம், புதுப்பாளையம் மற்றும் தெக்கலூர் ஊராட்சி பகுதிகளிலுள்ள பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கில் மான்கள் வாழ்ந்து வருகின்றன.

சிறுத்தை, நரி உள்ளிட்ட விலங்குகள் இல்லாதது, இப்பகுதியில் மான்கள் பல்கிப் பெருக முக்கிய காரணம். இன்றைக்கு, சுமார் 200 ஏக்கரில் விவசாய விளை நிலங்கள் ஊடாக, மான்கள் தங்களது வாழ்விடத்தை வலுவாக அமைத்துக் கொண்டன. கடந்த 30 நாட்களுக்கும் மேலாக இந்த பகுதியில் கடும் வெப்பம் நிலவுகிறது. இதனால் மான்கள் தங்களது வாழ்விடத்தில் இருந்து குடிநீர் மற்றும் இரை தேடி இடம் பெயரும் போது, உயிரிழப்புகளை சந்திக்கின்றன.

புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் பின்புறம் நேற்று முன்தினம் தண்ணீர் தேடி இரண்டு மான்கள் வந்தன. அப்போது அப்பகுதியில் இருந்த நாய்கள், மான்களை சூழ்ந்து கொண்டு கடித்து காயப்படுத்தின. இதில் இரண்டு மான்களும் உயிரிழந்தது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: தற்போதைய கடும் வறட்சியால் விவசாயிகள் எதுவும் பயிரிடாமல் இருப்பதால், மான்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. உணவு, தண்ணீர் தேடி இடம்பெயரும் சூழலில் மான்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றன. மான்களை நஞ்சராயன் குளத்தில் கொண்டு சென்று விட முடியாது. அது, பறவைகளுக்கான இடம். நஞ்சராயன் குளத்தில் உள்ள தண்ணீரால், அவற்றுக்கு வேறு வித தொல்லைகள் ஏற்படும்.

கோடை காலம் முடியும் வரை, வீடுகளில் குருவிகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதை வழக்கமாக்குவோம். அதேபோல் மான்கள் பெருங்கூட்டமாக வாழும் பகுதியில் தேவையான தண்ணீர் கிடைப்பதையும், வனத்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.

மான்களின் குடிநீர் தேவைக்காக சில இடங்களில் குடிநீர் தொட்டிகள் உள்ளன. ஆனால் அவை போதிய அளவிலும், மான்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் இல்லாததால், மான்கள் வெளியேறுகின்றன. இதில் வனத்துறை போதிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குடிநீர் மற்றும் இரைதேடி வெளியேறும் மான்களின் உயிரிழப்புகளை தடுக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE