கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ஆழ்துளை கிணறு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

திருச்சி: கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் லால்குடியில் நேற்று சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் பாடாலூர் சிட்கோதொழிற்பேட்டை, எறையூர் சிப்காட் தொழிற்பூங்கா ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் எடுத்துச் செல்வதற்காக, ரூ.366 கோடி மதிப்பில் கொள்ளிடம்- காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தது.

இதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சாத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனந்திமேடு கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், இப்பகுதியில் ஏற்கெனவே நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் செய்ய போதிய தண்ணீர் இல்லாமல் வாடுகிறோம். எனவே, குடிநீர் திட்டத்துக்காக இப்பகுதியில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆனந்திமேடு கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுமுதியவரான ஜெகநாதன் மற்றும் விவசாயிகளான ரவி, செல்வம், சரத்குமார், அருண்குமார் ஆகியோரை நேற்று அதிகாலை லால்குடி போலீஸார் விசாரணைக்காக லால்குடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதையறிந்த ஆனந்திமேடு மற்றும் சாத்தமங்கலம் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எதிரேஉள்ள திருச்சி- சிதம்பரம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் மற்றும் லால்குடி வட்டாட்சியர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆழ்துளை கிணறு அமைப்பதை கைவிடாதவரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என மறியலில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE