மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறிய சாம்பலால் கிராம மக்கள் அவதி

By செய்திப்பிரிவு

மேட்டூர்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்குச் சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. இதில் 23 ஆயிரம் டன் நிலக்கரி பயன்படுத்தப்பட்டு 1,400 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நிலக்கரியை பயன்படுத்திய பிறகு, அதிலிருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் புகையை சாம்பல் பிரிப்பான் இயந்திரம் மூலம் சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனிடையே, அனல் மின் நிலைய 2-வது பிரிவில் சாம்பல் பிரிப்பான் இயந்திரம் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொதிகலனில் இருந்து வெளியேறும் சாம்பலை பாதுகாப்பாக அகற்ற முடியாமல், காற்றில் பரவி வருகிறது. இதன் காரணமாக, சாம்பல் துகள்கள் நேற்று அதிகளவில் வெளியேறின.

இதனால் அனல் மின் நிலையம், மேட்டூர் அணை, மேட்டூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் சாம்பல் துகள்களால் முழுமையாக மூடப்பட்டு பனி மூட்டம் போல காட்சியளித்தன. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக் குள்ளாகினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE