தமிழக அரசு ‘கைவிட்ட’ பாலாறு - பாலாற்று நீர்வள ஆர்வலர் ஆதங்கம் 

By ந. சரவணன்

திருப்பத்தூர்: தமிழக பட்ஜெட்டில் ஆறுகள் புனரமைப்பு திட்டத்தில் பாலாறு சேர்க்கப்படாதது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மக்களின் துரதிஷ்டம் என பாலாற்று நீர்வள ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு செயலாக்கக் குழு உறுப்பினர் மற்றும் பாலாற்று நீர்வள ஆர்வலரான அம்பலூர் அசோகன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜிடம் இன்று (வியாழன்கிழமை) கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ''தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் ஆறுகள் புனரமைக்கும் திட்ட அட்டவணையில் பாலாறு பெயர் இடம் பெறவில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 1996ல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மத்திய அரசு சுற்றுச்சூழல் அறிக்கையை கேட்டது. ஆனால் தமிழக அரசு 30 ஆண்டுகளாக அந்த அறிக்கை வழங்காமல் தாமதப்படுத்தி வருகிறது. எனவே, பாலாறு சுற்றுச்சூழல் அறிக்கை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பாலாறு ஜீவநதியாக மாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னைக்கு 3-வது குடிநீர் ஆதாரமாக காவேரிப்பாக்கம் ஏரி கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது. கிருஷ்ணா நதி நீரை ஆந்திர அரசு சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதிக்கு கர்னூல் வழியாக கால்வாய் அமைத்து 'அந்திரி நிவா' திட்டத்தின் கீழ் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொண்டு வந்துள்ளது. இந்த கால்வாயில் உபரி நீர் பாலாற்றில் கலக்கின்ற வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே குடிநீர் திட்டத்தில், ஆந்திர அரசிடம் பேசி 10 டிஎம்சி தண்ணீரை பெற்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களில் செல்லும் பாலாறு மற்றும் பாலாறு படுகையை வளமுள்ள பூமியாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு ஆந்திர அரசுக்கு உடனடியாக கடிதம் எழுத வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தை யொட்டியுள்ள தமழக – ஆந்திர எல்லைப்பகுதியான புல்லூரில் தொடங்கி மாதனூர் வரை சுமார் 48 கி.மீ வரை பாலாறு பயணிக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. இது தவிர நெல், வாழை, கரும்பு ஆகிய பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஜவ்வாதுமலை மற்றும் ஏலகிரி மலைப்பகுதிகளில் சிறுதானியங்கள் அதிகமாக பயிரிப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் தண்ணீர் வளம் இருந்தது. இந்த பகுதியானது காவிரியை விட விவசாயத்தில் சிறந்து விளங்கியது. இதை பழைய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தோல் தொழிலும், தோல் பொருட்கள் உற்பத்தி தொழிலும் சிறந்து விளங்குகிறது. தோல் தொழிலுக்கு அடுத்தப்படியாக ஊதுவத்தி தொழிலும் சிறந்து விளங்கிவருகிறது. தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் கழிவுகள் நகராட்சி பகுதிகள், பேரூராட்சி பகுதிகள், கிராம ஊராட்சிகளில் வழியாக பாலாற்றில் கலக்கிறது.

இதனால், வாணியம்பாடி முதல் மாதனூர் வரை உள்ள பாலாற்று நீர் குடிக்க தகுதியற்ற நீராக மாறிவிட்டது. அதேபோல, அம்பலூர், ஆலங்காயம் உள்வட்டங்கள் இல்லாமல் ஏனைய பகுதிகள் அனைத்தும் சுற்றுச்சூழலால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 1996-ம் ஆண்டு சிவில் 914/1991 வழக்கில் பாலாற்றில் கலந்துள்ள குரோமிய கழிவுகளை அகற்ற வேண்டும் என அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. ஆகவே, பாலாற்றில் படிந்துள்ள குரோமிய படிமங்களை கணக்கீடு செய்து அதனை அகற்றும் முயற்சியை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மேலும் இந்தியாவில் தேர்தலுக்கான பொய்யான திட்டம் நதிநீர் இணைப்பு திட்டம் இது இதுவரை நடக்கவில்லை'' என்று மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE