ஒற்றை யானையை பிடிக்க  தமிழக - கர்நாடக வனத் துறையினர் தீவிரம் @ ஓசூர்

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே 2 பெண்களை கொன்ற ஒற்றை யானையை பிடிக்க தமிழக - கர்நாடக மாநில வனத் துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கர்நாடக மாநில வனப்பகுதியிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் 150-க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி ஆகிய வனப்பகுதியில் தனி தனிக் குழுக்களாக பிரிந்து சென்று இரவு நேரங்களில் விளை நிலங்களை சேதப்படுத்தி வந்தது. இந்த யானைகளை மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கு இடம் பெயர செய்யும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுப்பட்டு வரந்தனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநில வனப்பகுதியில் யானை கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த ஒற்றை யானை, ஜவளகிரி வழியாக தேன்கனிக்கோட்டைக்கு இடம்பெயர்ந்து, குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தும், விளை நிலங்களையும் சேதப்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

அந்த ஒற்றை யானை 2 பெண்கள் மற்றும் 2 பசுமாடுகளை மிதித்து கொன்றது. அதேபோல் 2 பேரை தாக்கியதில் படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மனிதர்களையும், கால்நடையையும் கொன்ற ஒற்றை யானையால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

இதனையடுத்து, வனத்துறையினர் 4 குழுக்கள் அமைத்து யானையை ட்ரோன் மூலம் தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆனால் ஒற்றை யானை வனத்துறையினர் கண்ணில் படாமல் அடந்த வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்ததால், உதவி வன பாதுகாவலர் ராஜமரியப்பன், ஓசூர் வனசரகர் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் கர்நாடக மாநில வனத்துறையினருடன் இணைந்து தமிழக - கர்நாடக மாநில இடையில் உள்ள வனப்பகுதியில் தீவிரமாக தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது: “பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை பிடிக்க 4 குழு அமைத்து தேடி வருகிறோம். ஆனால் யானை தேவர்பெட்டா வனப்பகுதிக்குள் சென்று இருக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழக வனத்துறையினர் 20 பேர், அதேபோல் கர்நாடக மாநில வனத்துறையை சேர்ந்த 3 வனசரகர்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் மற்றும் கால்நடை மருத்துவர் உதவியுடன் தமிழக - கர்நாடக மாநிலத்தின் இடையில் உள்ள கும்பளாபுரம், மேலக்கரை மற்றும் கர்நாடக மாநிலம் சிந்தல்வாடி ஆகிய பகுதிகளில் யானை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து, தேடும் பணியில் ஈடுப்பட்டோம்.

யானையின் நடமாட்டம் தெரிந்துகொள்ள இரு மாநில வனத்துறையினர் சேர்ந்து வாட்சாப் குழு அமைத்துள்ளோம். யானை தென்பெட்டால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE