கோவை சேரன்மாநகர் குடியிருப்பு பகுதியில் 5 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டி

By செய்திப்பிரிவு

கோவை: கோவை சேரன் மாநகரில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதாகவும், 5 வருடங்களுக்கு மேலாக குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப் படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ளது சேரன்மாநகர். அரசு போக்கு வரத்து கழக ஊழியர்கள் குடியிருப்பு பகுதியான இங்கு ஏ, பி, சி என மூன்று பிரிவுகளில் மொத்தம் 568 குடியிருப்புகள் உள்ளன. இரண்டு இடங்களில் மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப் பட்டுள்ளன. இவை உரிய முறையில் பராமரிக்கப் படுவதில்லை என்றும் விநியோகிக்கப்படும் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சேரன் மாநகர் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் சுந்தர் ராஜன் கூறியதாவது: சேரன் மாநகரில் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், குப்பையை அகற்றுதல், சாக்கடை கால்வாயை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் சரிவர மேற்கொள்ளப் படுவதில்லை. 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப் படுகிறது. சீரான முறையில் வழங்கப் படுவதில்லை.

அதேபோல் நான்காவது பேருந்து நிறுத்தம் அருகே சி -132 மற்றும் அந்த லைனில் உள்ள வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது வரை குடிநீர் விநியோகிக்கப்படும் நேரத்தில் முதலில் ஐந்து நிமிடங்கள் தண்ணீரை பிடிக்காமல் சாக்கடை கழிவுநீர் கலப்பு குறைந்த பின் குடிநீர் பிடிக்கும் நிலை உள்ளது. மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைந்துள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாததால் புதர் மண்டி காட்சியளிக்கிறது.

மேலும் பல்வேறு பகுதிகளில் பெறப்படும் குப்பை கழிவுகளை அப்பகுதியில் குவித்துவைத்து, அங்கிருந்து கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் குடிநீர் தொட்டிகள் அமைந்துள்ள பகுதிகள் சுகாதாரமற்ற முறையில் காட்சியளிக்கின்றன. மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல உதவும் தரைத் தொட்டிகளை ( சம்ப் ) சுத்தம் செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் சுத்தமான குடிநீர் கிடைக்காத அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு: சேரன் மாநகர் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் 10 ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து மோசமான நிலையில் காட்சியளித்தன. மாநகராட்சி நிர்வாகம், தமிழக உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு உடனடியாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ஆணையம் உத்தரவிட்டது. இச்சம்பவத்திற்கு பின் மீண்டும் அதே போன்ற அவல நிலை தொடர்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE