கிருஷ்ணகிரி வனப்பகுதியில் கோடைக்கு முன்னர் தீ தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா?

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் கோடைக் காலத்துக்கு முன்னர் தீ தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மொத்தம் 5,143 சகிமீ பரப்பளவைக் கொண்டது. இதில், ஓசூர் வனக்கோட்டம் 1,492 சகிமீ வனப் பரப்பளவை உள்ளடக்கியது. வனப்பகுதியில் உயிர் வாழும் வன உயிரினங்களின் பாதுகாப்புக்காகக் கடந்த 2014-ம் ஆண்டு காவிரி வடக்கு வன உயிரின சரணாலயமும், 2022-ம் ஆண்டு காவிரி தெற்கு வன உயிரின சரணாலயமும் அமைக்கப்பட்டது.

வன உயிரினங்கள், மரங்கள்: இந்த வனப்பகுதியில் தேக்கு, ஈட்டி, சந்தனம், ஜாலாரி, உசில், ஆச்சான் உள்ளிட்ட மரங்கள் அதிகளவில் உள்ளன. இதேபோல, யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள், கடமான்கள், கரடிகள், எறும்புத்தின்னிகள், காட்டு பூனைகள் மற்றும் மயில்கள் மற்றும் அரியவகையான சாம்பல்நிற அணில்கள், எகிப்திய கழுகு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், அழிந்து வரும் அரிய வகை பட்டாம் பூச்சிகளும் உள்ளன. மேலும், 50 ஆண்டுகளுக்குப் பின்னர் 2 புலிகளின் நடமாட்டம் இருப்பது அண்மையில் தெரிய வந்தது.

ஆண்டுதோறும் கோடைக் காலங்களில் வனப்பகுதியில் ஏற்படும் வறட்சியால் காட்டுத்தீ ஏற்படுவது அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட அய்யூர் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு சுமார் 40 ஏக்கர் வரை பரவி வன உயிரினங்கள் மற்றும் மரங்கள் சேதமாகின. இந்நிலையில், நடப்பாண்டில் கோடைக்கு முன்னர் வனப்பகுதியில் தீ தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இயற்கை காலநிலை: இதுதொடர்பாக இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: இயற்கை காலநிலை அளவீடுகளான மிகை வெப்பம், வேகக்காற்று மற்றும் திசை வேகம், ஈரப்பதத்தின் அளவு, மண்ணிலும், காற்றிலும் வறண்ட நிலை, மேலும் மூங்கில் வாரைகள் உரசல்களால் ஆண்டுதோறும் கோடையில் காட்டுத்தீ ஏற்படுவது அதிகரித்து வருகிறது. காட்டுத் தீயால் சிறிய பூச்சிகள், வண்டுகள், புழுக்கள், பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள் என எண்ணற்ற உயிரினங்கள் மற்றும் அரிய வகை மரங்கள் அழிந்து வருகின்றன.

நடப்பாண்டில் கோடைக்கு முன்னர் வனப்பகுதியில் தீ தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மலைவாழ் மக்கள், சுற்றுலாப் பயணிகளிடம் காட்டுத்தீ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

50 பேர் கொண்ட குழு அமைப்பு: இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதைத் தடுக்க 50 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவினர் வனப்பகுதிக்குச் செல்வோரின் உடைமைகளைச் சோதனை செய்து, பீடி, சிகரெட், தீப்பெட்டி போன்ற பொருட்கள் இருந்தால் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுதொடர்பாக மலைவாழ் மக்களிடம் விழிப்புணர்பு துண்டு பிரசுரங்கள் வழங்கவும், தீத்தடுப்பு கோடுகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE