திருமூர்த்தி அணையில் தண்ணீர் மாசு - நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

உடுமலை: திருமூர்த்தி அணையில் இருந்து குடிநீர் எடுக்கப்படும் இடத்தில் சிலரின் அத்துமீறிய செயல்களால், தண்ணீர் அசுத்தமாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை நகரம், குடிமங்கலம், மடத்துக் குளம் உள்ளிட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் எடுக்கப்பட்டு, குழாய்கள் மூலம் விநியோகிக்கப் படுகிறது. இத்திட்டங்கள் மூலம் சுமார் 10 லட்சம் பேரின் குடிநீர் தேவை பூர்த்தியாகி வருகிறது. அணையில் இருந்து குடிநீர் எடுக்கப்படும் இடத்தில் சிலர் அத்து மீறி குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் தண்ணீர் அசுத்தமாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: அணையின் முகப்பில் உள்ள வாய்க்காலில் குழாய்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் எதிரே உள்ள நீரேற்று நிலையங்கள் மூலம் தனித் தனியாக குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்படும் போது துணிகளை துவைப்பது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் மரங்களில் இருந்து விழும் இலைகள், முறிந்து விழும் மரக்கிளைகளும் தண்ணீரில் விழுந்து தேங்கியிருப்பதால், தண்ணீர் அசுத்தமாகி வருகிறது.

இதனால் பொதுமக்கள் அருந்தும் குடிநீரின் தரம் கேள்விக்குறியாக உள்ளது. குடிநீர் எடுக்கப்படும் இடம் பாதுகாப்பானதாகவும், சுத்தமாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேற்படி இடத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, தண்ணீரை மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE