அரசு பேருந்தை வழிமறித்த யானையால் அச்சம் @ காரப்பள்ளம்

By செய்திப்பிரிவு

ஈரோடு: காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே, அரசுப் பேருந்தை யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன. வனப் பகுதியில் வறட்சி நிலவுவதால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், ஆசனூர், காரப்பள்ளம் சோதனைச் சாவடி இடையே யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கரும்பு மற்றும் காய்கறிகளை ஏற்றி வரும் லாரிகளைத் தேடி சாலைகளில் யானைகள் காத்திருந்து, வாகனங்களை மறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன் தினம் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் சென்ற அரசுப் பேருந்து, காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே சென்ற போது, வனப் பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒன்று சாலையை வழி மறித்து நின்றது. பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், பேருந்தை நோக்கி யானை வந்ததால், அவர்கள் அச்சமடைந்தனர். பேருந்து ஓட்டுநர், பேருந்தை பின்னோக்கி இயக்கி, யானை செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார். யாரையும் அச்சுறுத்தாமல், யானை மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் பேருந்து புறப்பட்டுச் சென்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE