3 ஆண்டுகளாக மரத்தில் சாய்ந்து கிடக்கும் ‘பிரம்மாண்ட தூண்’ @ மதுரை சுற்றுச் சூழல் பூங்கா

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: முதல்வர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலரும் அன்றாடம் நடைப் பயிற்சி சென்ற மதுரை சுற்றுச்சூழல் பூங்காவில் ( எஃகோ பார்க் ) 3 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்த பிரம்மாண்ட தூண் மரத்தில் விழுந்து தொங்கிய படியே கிடக்கிறது.

இந்த தூணை அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதால் பூங்காவுக்கு நடைப் பயிற்சிக்கு வருவோர் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். மதுரை நகரின் மையமான கே.கே.நகரில் மக்கள் பொழுதை போக்கவும், நடைப் பயிற்சி மேற்கொள்ளவும் மாநகராட்சி வளாகத்தையொட்டி சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டது. 1999-ம் ஆண்டு இந்த பூங்கா திறக்கப்பட்டது. இப்பூங்காவில் பல்வகை மரங்கள் நடப்பட்டு சூரிய வெளிச்சமே தெரியாத வகையில் பசும் சோலையாக பராமரிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் முதல் மதுரைக்கு ஆய்வுக்கு வரும் அமைச்சர்கள், உள்ளூர் பிரமுகர்கள் தினமும் இந்த பூங்காவில்தான் நடைப்பயிற்சி மேற்கொள்வர். ஆனால், கடந்த 10 ஆண்டு களாக இந்த பூங்கா பராமரிப்பின்றி கிடக்கிறது. பூங்காவின் மையத்தில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. முன்பு அடர்ந்த மரங்களுடன் காணப்பட்ட இந்த பூங்கா தற்போது செடி, கொடிகள் மண்டி புதர் போல காணப்படுகிறது.

முன்பு மாநகராட்சி ஆணையராக இருந்த சந்தீப் நந்தூரி முயற்சியில் இரும்புக் கழிவில் இருந்து உருவாக்கி பூங்காவில் வைக்கப்பட்ட கலை நயமிக்க சிற்பங்கள் உடைந்து அலங்கோலமாக கிடக்கின்றன. நடைப் பயிற்சி பாதைக்கற்கள் சேதமடைந்துள்ளதால் மக்கள் சிரமப் படு கின்றனர். பூங்காவில் உள்ள குளத்தில் மழை நீரும், கழிவு நீரும் கலந்து பச்சை நிறத்தில் உள்ளது. இது குறித்து மாநகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் பல முறை அறிவுறுத்தியும் இந்த நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

பூங்காவில் உள்ள பிரம்மாண்ட தூண் ஒன்று 3 ஆண்டுகளுக்கு முன்பு சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையில் உடைந்து பாதி மரத்தில் தொங்கிய நிலையில் கிடக்கிறது. ஆபத்தை அறியாமல் அதன் கீழே அமர்ந்து நடைப்பயிற்சி செல்வோர் ஓய்வெடுக்கின்றனர். மேலும் பூங்காவில் சேரும் புதர்கள், செடி, கொடிகளை அப்புறப்படுத்தி நடைபாதை ஓரங்களிலேயே குவித்து வைத்துள்ளதால் தேள், பூரான், விஷப் பாம்புகள் அதில் அடைந்துள்ளன. நடைப் பயிற்சி செல்வோர் பலமுறை அவற்றைப் பார்த்ததால் அச்சம் அடைந்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி நிர்வாகம் நகரில் உள்ள பூங்காக்களை பராமரிக்கவும், குழந்தைகள், மக்கள் பொழுது போக்கும் இடமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இது போல் ராஜாஜி பூங்காவும் பராமரிப்பு இன்றி ஒப்பந்ததாரர் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் பூங்காவை சீரமைக்கவும், பூங்காவை புதுப் பொலிவாக்கவும் விடாமல் முட்டுக்கட்டை போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE