கோவை வேளாண் பல்கலை.யில் பிப்.23 முதல் 3 நாட்கள் மலர் கண்காட்சி

By செய்திப்பிரிவு

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், வரும் 23-ம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு மலர் கண்காட்சி நடக்கிறது.

வேளாண் பல்கலைக் கழக துணை வேந்தர் வெ.கீதா லட்சுமி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேளாண் பல்கலைக் கழகத்தின் சார்பில் 11 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. கடைசியாக கடந்த 2012-ல் நடைபெற்ற மலர் கண்காட்சியை 2 லட்சம் பேர் பார்வையிட்டனர். ‘கனவுகள் மலரட்டும்’ என்ற மையக்கருத்துடன் இந்த 6-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

மல்லிகை, செண்டு மல்லி, சம்பங்கி, கனகாம்பரம், தாமரை, செவ்வந்தி, ஆஸ்டர், பெட்டூனியா, சால்வியா, பேன்சி போன்ற உதிரி மலர்களைக் கொண்டும், ரோஜா, கார்னேசன், ஆர்க்கிட், ஆந்தூரியம், லில்லியம், ஜெர்பெரா, லிஸியான்தஸ், ஹெலிகோனியா, ஜிப்ஸோபில்லா, ஸ்டேடிஸ், சொர்க்கத்து பறவை போன்ற கொய் மலர்களாலும், பிராசிகா, பேங்க்ஸியா, லூயூகோஸ்பெர்ம், அன்னாசி போன்ற அரியவகை அயல்நாட்டு அலங்கார மலர்களையும் கொண்டும் கலை நயத்துடன் பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட உள்ளன.உலர் மலர்களைக் கொண்டு உருவாக்கப் பட்ட கைவினைப் பொருட்களின் அலங்கார அமைப்புகள் மற்றும் ‘இக்கிபானா' என்ற ஜப்பானிய வகை அலங்கார அமைப்புகளும், காய்கறி, பழங்களை கொண்டும், போன்சாய் குட்டை செடி அலங்காரங்களும் இடம்பெற உள்ளன.

மேலும், கண்காட்சியில் உயர் ரக நாய்களின் அணிவகுப்பு, புகழ் வாய்ந்த பழங்கால வாகனங்களின் அணிவகுப்பு, புகைப்பட மற்றும் ஓவியக் கண்காட்சி, இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான சிறப்பு விளையாட்டுத் திடல் போன்ற அம்சங்களும் இடம் பெறுகின்றன. பல்வேறு துறைகளின் சார்பில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, மலர் கண்காட்சி குறித்த கையேட்டையும் துணை வேந்தர் வெளியிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE