பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்ய கள்ளியூர் மலைக் கிராம மக்கள் கோரிக்கை

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளியூர் மலைக் கிராமத்தில் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட மலைக் கிராமம் கள்ளியூர். இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இரு திறந்த வெளி கிணறுகள் வெட்டப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ஒரு கிணற்றில் மின் மோட்டார் பழுதான நிலையில் அதைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், ஒரு கிணற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், அந்த கிணறு தூர்வாராத நிலையும், பாதுகாப் பற்ற முறையில் திறந்த வெளியில் இருப்பதால், சுகாதாரமற்ற நீரை மக்கள் பருகும் நிலையுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு காய்ச்சல், சளி, வயிற்றுப் போக்கு ஏற்படுவதாக மலைக் கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக அக்கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் உள்ள திறந்த வெளி கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இக்கிணற்றைத் தூர்வாராததால், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. திறந்த வெளி கிணறு என்பதால், பறவைகள் எச்சம் கிணற்று நீரில் விழுகிறது. கிணற்றில் குப்பை தேங்கி நீர் மாசடைந்து உள்ளது.

சில நேரங்களில் இறந்த பறவைகள், எலி, தவளைகளை கிணற்றில் வீசி வருகின்றனர். இதனால், பாதுகாப்பற்ற குடிநீரைப் பருகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஊராட்சித் தலைவரிடம் பல முறை கூறியும் நடவடிக்கை இல்லை. கிராம சபைக் கூட்டத்தின் போது தகவல் தெரிவிக்கலாம் என நினைத்திருந்தோம். ஆனால், கிராம சபைக் கூட்டம் நடப்பதை எங்களுக்கு தெரிவிக்கவில்லை.

எனவே, மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்துக்குப் பாதுகாப்பான குடிநீர் விநியோகத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைக்கு, திறந்தவெளி கிணற்றின் மீது கம்பி வலை அமைக்க வேண்டும். கிணற்றை தூர்வாரி கோடை காலத்தில் தட்டுப் பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE