உதகையில் உறைபனி பொழிவு: கடும் குளிரால் பொதுமக்கள் அவதி

By செய்திப்பிரிவு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் இம்மாத தொடக்கம் முதல் கடுமையான உறைபனி பொழிவு இருந்து வருகிறது. நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், அதிகாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உதகை அருகே தலை குந்தா, சோலூர், அவலாஞ்சி பகுதிகளில் வெப்ப நிலை 0 டிகிரி வரை பதிவானது. பகல் நேரத்தில் வறண்ட மற்றும் கடும் வெயிலான கால நிலை நிலவும் நிலையில், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டுகிறது. கடும் பனிப் பொழிவு காரணமாக தேயிலை மற்றும் வனங்களில் செடி, கொடிகள் கருக தொடங்கியுள்ளன.

பனிப் பொழிவு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டிலுள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உதகை மரவியல் பூங்காவிலுள்ள அலங்கார செடிகள் பாதிக்காமல் இருக்கும் வகையில், செடிகள் கொண்டு பாதுகாப்பு செய்யப் பட்டுள்ளன. இது தவிர காலை மற்றும் மாலை நேரங்களில் ஊழியர்கள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE