வால்பாறையில் நிலவும் பருவநிலை மாற்றத்தால் கேரளாவுக்கு இடம்பெயரும் யானைகள்

By செய்திப்பிரிவு

வால்பாறை: கோவை மாவட்டம் ஆனை மலை புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்துள்ள வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப் பகுதிகளுக்கு ஆண்டுதோறும் பருவ மழைக்கு பின்னர் கேரளாவில் இருந்து மளுக்குப் பாறை, மயிலாடும்பாறை வழியாக யானைகள் இடம் பெயர்வது வழக்கம்.

எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களிலும், இரவு நேரத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள்ளும் யானைகள் புகுந்து, வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வால்பாறையில் மழைப் பொழிவு குறைந்து வெயில் நிலவுவதால், பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டிருந்த யானைகள் மீண்டும் கேரளா வனப் பகுதிக்கு இடம் பெயர தொடங்கியுள்ளன.

இதனால் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘‘வால்பாறையில் தற்போதுள்ள யானைகளுடன் கேரளாவில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டிருந்தன. வால் பாறையில் தற்போது நிலவும் பருவநிலை மாற்றத்தால், யானைகள் தனித் தனி கூட்டமாக கேரளாவுக்கு இடம் பெயர தொடங்கியுள்ளன. பருவ மழை தொடங்கிய பின்பு யானைகள் மீண்டும் வால்பாறைக்கு வரும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE