உடுமலை - மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்

By செய்திப்பிரிவு

உடுமலை: உடுமலை அருகே மூணாறு சாலையில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து செல்வதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனை மலை புலிகள் காப்பகத்துக்குட்பட்டு உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. உடுமலையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் கேரள மாநிலம் மூணாறு உள்ளது. இதனால், இரு மாநிலங்களுக்கும் இடையே தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் பகுதியாக ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. கடந்த சில நாட்களாக உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக காட்டு யானைகள் உடுமலை - மூணாறு சாலையை கடந்து செல்கின்றன.

இது தொடர்பாக, உடுமலை வன அலுவலர் சிவக்குமார் கூறியதாவது: உடுமலை வனப் பகுதியான புங்கன் ஓடை பகுதியில் இருந்து குடிநீருக்காக அமராவதி வனச் சரகத்துக்குட்பட்ட அணையை நோக்கி யானைகள் வருவது வழக்கம் தான். யானைகள் நடமாட்டத்தை வன ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

உடுமலை - மூணாறு சாலையில் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் எனவும், வன விலங்குகளை கண்டால் புகைப் படம் எடுப்பது, வன உயிர்களை துன்புறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளோம். வன விலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE