பிரிக்க முடியாதது என்னவோ? - பிருந்தாவன் நகரும் கழிவுநீர் தேக்கமும்!

By சி.பிரதாப்

சென்னை: கீழ்கட்டளை பிருந்தாவன் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் உள்ள காலிமனைகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் தொல்லையால் அந்தப் பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2-ல் கீழ்கட்டளைக்கு அருகே உள்ள பிருந்தாவன் நகர், பாலாஜி அவென்யூ உட்பட பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் கணிசமான காலி மனைகள் உள்ளன. அவற்றை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் முறையாக பராமரிக்காமல் உள்ளதால் அந்த இடங்களில் புதர்கள் மண்டியுள்ளன. மேலும், ஒவ்வொரு மழைக்கும் வெள்ளநீர் தேங்கி அவ்விடமானது சாக்கடையாக மாறுவது வழக்கமாகி வருகிறது.

இதுதவிர அந்தப் பகுதிகளில் முறையான சாக்கடை வசதிகள் இல்லாததால் அருகே உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் காலி மனைகளில் விடப்படுகிறது. மழைக் காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் தொல்லையும் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கான சூழல்கள் நிலவுகின்றன.

தொற்றுநோய் அச்சத்திலும் அந்த இடங்களில் வசிக்கும் மக்கள் தவித்துவருகின்றனர். இதையடுத்து காலிமனைகளில் நீர் தேங்காத வகையில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது: ஐ.டி. ஊழியர் க.ராம்குமார் என்பவர் கூறும்போது, பிருந்தாவன் நகர் பகுதியானது தாழ்வானதாக இருப்பதால் மழைக்காலங்களில் அந்த இடத்தில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. குறிப்பாக காலிமனைகளில் தேங்கும் வெள்ள நீரானது சாக்கடையாக மாறிவிடுவதால் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. காலியிடங்களில் குப்பைகளும் கொட்டப்படுவதால் துர்நாற்றமும் வீசுகிறது. அவ்வப்போது காய்ச்சல்உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட வேண்டியுள்ளது. அதை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறைபுகார் அளித்தும் பலனில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மளிகை கடை வைத்திருக்கும் எம்.விசுவநாதன் என்பவர் கூறும்போது, "மழையால் அருகே உள்ள மூவரசன்பேட்டை ஏரி நிரம்பி உபரி நீரும் சிறுமழைக்கே தேங்கும் மழைநீரும் இந்த குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகிறது. சாக்கடை கட்டமைப்பு வசதிகளும் மோசமாக இருப்பதால் மழை பெய்தாலே ஒருவிதமான அச்சத்துடன் வாழ வேண்டிய சூழலில் தவிக்கிறோம். எனவே, காலிமனைகளில் மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுப்பதுடன், கழிவுநீர் கால்வாய் வசதிகளையும் முறையாக ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மூவரசன் பேட்டை ஏரிநிரம்பியதால் அதன் உபரி நீர் குடியிருப்புக்குள் புகுந்துவிடுகிறது. அதற்கான மாற்று ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதேபோல், கழிவுநீர் தேங்காதவாறு பராமரிக்க காலிமனை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதை பின்பற்றாதவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், புகார்கள்பெற்ற பகுதிகளில் சுகாதார முன்னெச்சரிக்கை பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.’’என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE