மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய வகை வண்ணத்துப்பூச்சி 33 ஆண்டுக்கு பிறகு கண்டுபிடிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்கு பிறகு ‘கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன்’ என்றபுதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பு: வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மேகமலை கோட்டத்தில் ‘கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன்’ எனும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனமாகும். மேகமலையில் காணப்படுவதால், இருப்பிட பெயரே அதற்கு சூட்டப்பட்டுள்ளது.

தேனியை சேர்ந்த ‘வனம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் காலேஷ் சதாசிவம், எஸ்.ராமசாமி காமையா மற்றும் சி.பி.ராஜ்குமார் ஆகியோர் இந்த வண்ணத்துப்பூச்சி இனத்தை கண்டுபிடித்துள்ளனர். வனத் துறை தலைவர் சீனிவாச ரெட்டி, துணை இயக்குநர் ஆனந்த், கள இயக்குநர் பத்மாவதி ஆகியோர் உதவியுடன் ஆய்வாளர்கள் இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றிய தகவல், ‘என்டோமான்’ எனும்அறிவியல் ஆய்வு இதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு மூலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி இனங்களின் எண்ணிக்கை 337ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE