‘திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகரம்’ - திருச்சி மாநகராட்சிக்கு மத்திய அரசின் விருது

By செய்திப்பிரிவு

திருச்சி: திறந்தவெளி கழிப்பிடமில்லாத நகருக்கான மத்திய அரசின் விருது திருச்சி மாநகராட்சிக்கு கிடைத்துள்ளது. மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் பல்வேறு செயல்பாடுகளின் அடிப்படையில் நகரங்களைத் தேர்வு செய்துஆண்டுதோறும் விருது வழங்கிசிறப்பித்து வருகிறது.

இதன்படி,தூய்மை இந்தியா திட்டத்தின்படி திறந்தவெளி கழிப்பிடங்கள்இல்லாத நகரங்களைத் தேர்வு செய்வதற்கான போட்டி, அண்மையில் நடைபெற்றது.

இதில், நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட 446 நகரங்கள் கலந்து கொண்டன. தமிழகத்திலிருந்து 29 நகரங்கள் போட்டியில் பங்கேற்றன.

இதில், திருச்சி மாநகராட்சி சமர்ப்பித்த பல்வேறு தரவுகளின் அடிப்படையில் திறந்தவெளி கழிப்பிடமில்லாத நகருக்கான விருதைப் பெற்றது. தமிழக அளவில் திருச்சி மாநகராட்சி முதலிடத்தையும், இந்திய அளவில் 112-வது இடத்தையும் பெற்றுள்ளது.

இதற்கான விருது வழங்கும் விழா, டெல்லியில் நேற்று நடைபெற்றது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் முதன்மைச் செயலர் மனோஜ் ஜோஷியிடம் இருந்து மாநகர மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் ஆகியோர் விருதைப் பெற்று கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE