மதுராந்தகம்: வேடந்தாங்கலை அடுத்த கரிகிலி பறவைகள் சரணாலயம் கடந்த 2022-ம் ஆண்டு ராம்சார் தளமாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அந்த சரணாலயத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும் பறவைகள் வருகையை அதிகரிக்கும் வகையில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், பறவைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் விருப்பத்துக்குரிய இடமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், வேடந்தாங்கல் அருகே சுமார் 62 ஹெக்டேர் பரப்பளவுகொண்ட ஏரியில் கரிகிலி சரணாலயமும் அமைந்துள்ளது. இங்கு, நீர் வாத்துகள் உட்பட பல்வேறு நீர்வாழ் பறவையினங்கள் அதிகளவில் வந்து செல்கின்றன.
மேலும், ஏரிகளில் உள்ள புதர்களில் முட்டையிட்டு குஞ்சு பொறித்து இனப்பெருக்கம் செய்கின்றன. இதனால், வேடந்தாங்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் கரிகிலி சரணாலயத்துக்கு கட்டாயம் சென்று பார்வையிட்டு வந்தனர். இதையடுத்து, வனத்துறை சார்பில் கரிகிலி சரணாலயம் அமைந்துள்ள ஏரியில் நடைபாதை, சிறுவர்களை கவரும் வகையிலான பறவைகள் சிற்பங்கள், வாட்ச் டவர், குடிநீர் குழாய்கள் அமைத்து மேம்படுத்தப்பட்டது.
ஆனால் நிதி ஒதுக்கீடு இல்லாததால், முறையான பராமரிப்பு மேற்கொள்ள முடியவில்லை. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் சிறிது, சிறிதாக குறைந்தது. அதேபோல், சரணாலயம் அமைந்துள்ள ஏரியும் பராமரிப்பின்றி கரைகள், நீர்வரத்து கால்வாய்கள் சேதமடைந்து நீர்வரத்து குறைந்தது.
» குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
» மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.11 - 17
இதனால், பறவைகள் வருகையும் குறைந்துள்ளது. கரிகிலி சரணாலயத்தை காணவரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சரணாலயத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
ராம்சார் உடன்படிக்கை: இதனிடையே, கடந்த 2022-ம் ஆண்டு கரிகிலி சரணாலயம் ஈரநிலங்களை அடையாளப்படுத்தும் ராம்சார் தளமாக அங்கீகரிக்கப்பட்டது. ராம்சார் உடன்படிக்கை அல்லதுஈரநிலங்களுக்கான உடன்படிக்கை என்பது, ஈரநிலங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் பாதுகாப்புக்காக சர்வதேச அளவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்படிக்கையாகும்.
1971-ம் ஆண்டில் ஈரானில் உள்ள ராம்சார் நகரத்தில் இதற்கான உடன்படிக்கை கையெழுத்தானது. இயற்கை வளங்களை பாதுகாத்து ஈரநிலங்களின் செழுமையை பேணுவதே இந்த உடன்படிக்கையின் குறிக்கோளாகும்.
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களையும், குறிப்பாக பறவைகளின் புகலிடங்களையும் ராம்சார் அடையாளப்படுத்துகிறது. இந்த அங்கீகாரம் கரிகிலி சரணாலயத்துக்கு கிடைத்ததும், பல்வேறு வகையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என உள்ளூர் மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், மேம்பாட்டுப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாததால் ஏமாற்றமடைந்தனர். அதனால், கரிகிலி சரணாலயத்தை மேம்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் மற்றும் பறவை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பறவை ஆர்வலர்கள் கூறியதாவது: கரிகிலி சரணாலயத்துக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 20 ஆயிரத்துக்கும் அதிகமான நீர்வாழ் பறவையினங்கள் வந்து சென்றன. இதனை உள்ளூர் மற்றும் சுற்றுலாப்பயணிகளும் கண்டு ரசித்தனர். இதன்மூலம், வேடந்தாங்கல் வரும் அனைவரும் கரிகிலி சரணாலயத்துக்கு கட்டாயம் செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால், நாளடைவில் பராமரிப்பு உட்பட பல்வேறு காரணங்களால் பறவைகளின் வருகை பெரிதும் குறைந்துள்ளது.
தற்போது, குறைந்த அளவில் நீர்வாத்து, நீர்க்கோழி போன்ற பறவைகள் மட்டும் வந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளுக்காக ஏரிக்கரையில் அமைக்கப்பட்ட நடைபாதைகள் ஆங்காங்கே சேதடைந்துள்ளன. மேலும், ஏரிக்கு முறையாக நீர்வரத்து இல்லாமல் புதர் மண்டி காணப்படுகிறது.
கரைகளில் மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் நடைபெறவில்லை. வேடந்தாங்கல் ஏரியை போன்று, இந்த ஏரியிலும் வனத்துறை சார்பில் மீன் குஞ்சுகளைவிட்டு வளர்த்தால் நீர்வாழ் பறவைகளின் வருகை அதிகரிக்கும். அதனால், ஈரநிலத்துக்கான ராம்சார் அங்கீகாரம் பெற்ற கரிகிலி சரணாலயத்தை பல்வேறு வகையில் மேம்படுத்த வனத்துறை மற்றும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, வனத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, கரிகிலி சரணாலயத்தின் மேம்பாட்டு பணிகள் தொடர்பாகஅரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் உரிய அறிவிப்புகள் வரும் என நம்புகிறோம் என்றனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
16 hours ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
14 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
19 days ago
சுற்றுச்சூழல்
19 days ago
சுற்றுச்சூழல்
22 days ago