‘எஸ்பிசிஏ’ அமைப்பு முடங்கியதால் அதிகரிக்கும் விலங்குகள் - மனிதர்கள் மோதல்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தமிழகத்தில் நகர்ப்புறங்களில் தெரு நாய்கள், மாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது சிலர் அந்த விலங்குகளைத் தாக்குகின்றனர்.

மாநில அளவில் விலங்குகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் பொறுப்பாக உள்ளது. தேசிய அளவில் இந்திய விலங்குகள் நல வாரியமும், மாவட்ட அளவில் எஸ் பி சி ஏ ( society for prevention of cruelty to animals ) அமைப்பும் உள்ளன. அந்த அமைப்பின் தலைவராக மாவட்ட ஆட்சியர் இருப்பார். விலங்குகள் - மனிதர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும், விலங்குகளின் நலனுக்காகவும், ஆபத்தான விலங்குகளிடமிருந்து பொது மக்களைப் பாதுகாப்பதும் இந்த அரசு அமைப்பு பொறுப்பாகும்.

துரதிருஷ்டவசமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் விலங்குகள் மீதான கொடுமையைத் தடுப்பதற்கான அமைப்பு ( எஸ்பிசிஏ ) சமீப காலமாக செயலற்ற நிலையில் உள்ளது. அதனால், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. விவசாய நிலங்களில் யானைகள், பன்றிகள், காட்டெருமைகள் புகுந்து பயிர்களை அழிக்கின்றன. இதனால், வெகுண்டெழும் விவசாயிகளில் சிலர் அவற்றை சட்டவிரோதமான முறையில் கொல்வதும் ஆங்காங்கே நிகழத்தான் செய்கின்றன.

இந்நிலையில் சமீபகாலமாக தமிழகம் முழுவதும் தெருநாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திண்டாடுகின்றன. ஒரு மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவற்றின் மீதான கொடு மையைத் தடுப்பதற்கான அமைப்பு நேரடியாக பொறுப்பேற்று பொதுமக்களுக்குப் பதிலளிக்க வேண்டும். ஆனால், இந்த அமைப்பு தற்போது மதுரை மாவட்டத்தில் செயல்படாததால் தெரு நாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்து தெருக்களில் கும்பல், கும்பலாக நாய்கள் சுற்றித்திரிகின்றன.

அவை ஒரு விதத்தில் குடியிருப்பு பகுதிகளின் காவலாளிகளாக இருந்தாலும் சில நேரங்களில் குழந்தைகள், பெரியவர்களை கடித்துவிடுகின்றன. அதனால், தெரு நாய்களை மனிதர்கள் கொடூரமாக தாக்கும் சம்பவங்களும், அடித்துக் கொல்வதும் நடக்கின்றன. கடந்த 3-ம் தேதி மதுரை சட்டக்கல்லூரி அருகே ஒருவர் தெருநாயின் நான்கு கால்களையும் கட்டி இழுத்துச் சென்று தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விலங்குகள் நல ஆர்வலர்கள் முருகேஸ்வரி, நாதன் ஆகியோரது புகாரின் பேரில் தெரு நாயைத் தாக்கிய மதுரை கரும்பு ஆலையைச் சேர்ந்த பழனி கைது செய்யப்பட்டார்.

அவரது வீட்டில் இருந்த 4 கோழிகளை தெரு நாய் கடித்ததால் ஆத்திரத்தில் அவர் தெருநாயை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் சாயி மையூர் ஹசா கூறியதாவது: தற்போது உள்ள சட்டங்களின்படி மக்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தெரு விலங்குகளையும், வன விலங்குகளையும் கொல்ல முடியாது. மதுரை மாநகரில் 58 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பதாக மாநகராட்சி கூறுகிறது. ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேலான தெரு நாய்கள் இருக்கலாம். தெரு நாய்கள் கணக்கெடுப்பு சமீபகாலமாக நடத்தப்படவில்லை.

விலங்குகளால் சமூகத்துக்குப் பிரச்சினை ஏற்படுவதாக கருதினால், அதன் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அந்த விலங்குகளின் புள்ளி விவரத்தை அரசு நிர்வாகங்கள் வைத்திருக்க வேண்டும். ஆனால், சமீபகாலமாக தெரு நாய்கள் மட்டுமில்லாது மற்ற விலங்குகளின் புள்ளி விவரங்கள்கூட அரசுத் தரப்பிடம் இல்லை. கால் நடைகள் சாலைகளில் சுற்றித் திரிவதற்கு அதன் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் மட்டுமே தீர்வாகாது. கால்நடைகள், தெரு நாய்களின் எண்ணிக்கை, அவை எதற்காக சுற்றித் திரிக்கின்றன, அதனுடைய தேவை என்ன என்பதை அறிந்து கண்காணித்து அதற்குத் தீர்வு கண்டாலே இது போன்ற மோதல்களைத் தடுக்கலாம்.

மதுரை மாவட்ட ஆட்சியராக அனீஷ் சேகர் இருந்த போது விலங்குகள் மீதான கொடுமையைத் தடுப்பதற்கான அமைப்பின் மூன்று கூட்டங்கள் நடந்தன. இந்த அமைப்பின் உறுப்பினர்களான மாநகராட்சி நகர் நல அலுவலர், காவல்துறை அதிகாரி, கல்வித்துறை அதிகாரி மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் கலந்து கொண்டு விலங்குகள் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், விலங்குகள் மீதான தாக்குதலைத் தடுக்கவும், மனிதர்களுக்கு விலங்குகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.

இந்த அமைப்பினரின் கருத்துகளை நிறைவேற்றவும், அவ்வப் போது ஏற்படும் விலங்குகள் தொந்தரவுகளுக்கு தீர்வு காணவும், பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது இந்த அமைப்பின் செயல்பாடு முடங்கியிருப்பதோடு பொறுப்பு அதிகாரியும் நியமிக்கப்படாததால் மதுரையில் விலங்குகள் - மனிதர்கள் மோதல் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

மேலும்