பந்தலூர் அருகே மீண்டும் அட்டகாசம்: சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா கிராமத்தில், கடந்த சில நாட்களாக மனிதர்களை தாக்கி அச்சுறுத்தி வரும் சிறுத்தையால் பொது மக்கள் மிகுந்த அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். சிறுத்தையை பிடிக்க 6 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க 2 வனக் கால்நடை மருத்துவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேங்கோ ரேஞ்ச் பகுதி அங்கன்வாடியில் இருந்து தனது தாயுடன் சிறுமி வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை தாயின் கண்முன்னே சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. தாயின் அலறல் சத்தத்தை கேட்ட தொழிலாளர்கள், தேயிலை தோட்டம் முழுவதும் சிறுமியை தேடினர்.

பின் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி, பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகன மூலமாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுமி உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமி, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவசங்கர் குருவா, மிலந்தி தேவி தம்பதியின் மகள் நான்சி ( 3 ) என்பது தெரிய வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சிறுத்தை தாக்கி பழங்குடியின பெண் உயிரிழந்த நிலையில், தற்போது இரண்டாவது உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

தற்போது சிறுமி உயிரிழந்த சம்பவத்தால், தொண்டியாலம் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அப்பகுதியை முற்றுகையிட்ட வனத்துறையினர், சிறுத்தையை கண்டறிந்து மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். தொடர்ந்து சிறுத்தையை தேடி வருகின்றனர். இதற்கிடையே, படச்சேரி கிராமத்தில் மஞ்சுளா என்ற பெண்ணும் சிறுத்தை தாக்கி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம் காரம் கூறும் போது, ‘‘சிறுமியை தாக்கியது வேறு சிறுத்தை. தற்போது, நாயை வேட்டையாட சிறுத்தை முயற்சிப் பதை பார்த்த இந்த பெண் கீழே விழுந்துள்ளார். மாங்கோ ரேஞ்ச் மலைத் தொடரிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் படச்சேரி உள்ளது'’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE