புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணல் பரப்பால் விபத்து அதிகரிப்பு: 13 ஆண்டுகளில் கடலில் மூழ்கி 200+ உயிரிழப்பு

By செ.ஞானபிரகாஷ்

கடலின் ஆழம், சீற்றம் தெரியாமல் அழகை ரசித்தபடி கடலில் மூழ்கி வெளிமாநிலத்தவர் தொடங்கி உள்ளூர்இளையோரும் உயிரிழப்பது புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 13 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுற்றுலா பயணிகளை காக்க அரசு நடவடிக்கை எடுப்பதில் முனைப்பு காட்டவில்லை என பலரும் குற்றம் சாட்டுகின்றனர். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் முதலில் கண்டுமகிழ்வது புதுச்சேரி தலைமைச் செயலகம், காந்தி சிலை பகுதியை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியைத்தான். இந்த கடற்கரையில் இயற்கையான மணல் பரப்பு இல்லை.

புதுச்சேரி கடற்கரையில் கடல் அரிப்பை தடுத்து, செயற்கை மணல்பரப்பை உருவாக்க மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் தேசிய பெருங்கடல் தொழில் நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து, ரூ.25 கோடியில் நவீன தொழில்நுட்பத்தில் புதிய திட்டத்தை உருவாக்கியது. இதற்காக, புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுக முகத்துவாரத்தில் சேர்ந்துள்ள மணலை அள்ளி தூர்வாருவதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள மத்திய அரசின் ‘டிரஜ்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' நிறுவனத்துடன் புதுச்சேரி துறைமுகம் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்தது.

இப்பணி, ரூ.14.89 கோடி செலவில் நடந்தது. இதனால் புதிய கடற்கரை மணல் பரப்பு உருவானது. கடந்த 2018-ல் இப்பணி நடந்தது. அதன்பின்னர் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும்போது உயிரிழப்பது அதிகரித்துள்ளது. ஆனால் அரசு தரப்பில் போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தவில்லை. கடலில் சிக்கியோரை மீட்க நடவடிக்கையும் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதுச்சேரி கடற்கரையில் கடந்த 2010-ம்ஆண்டு முதல் 12 ஆண்டுகளில் 186 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2023-ல் 15 பேருக்கு மேல் இறந்துள்ளனர். செயற்கை மணல் பரப்பு உருவாக்கத் தொடங்கிய 2017-ம் ஆண்டில் அதிகளவாக 28 பேரும், 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் தலா 19 பேரும், கடந்த 2021-ம் ஆண்டில் 14 பேரும், 2022-ல் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டில் 15 பேருக்கு மேல் இறந்துள்ளனர். வெளிமாநிலத்தில் இருந்து வருவோர் கடல் அழகை ரசிக்கும்போது உற்சாக மிகுதியால் கடலில் குளிக்கச் செல்கின்றனர். அவர்களுக்கு கடலின் ஆழம், சீற்றம் தெரியவில்லை. அதனால் கடலின் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் கடந்த 31-ம் தேதி புதுச்சேரி மாணவ, மாணவிகள் நால்வர் கரையில் இருந்தபோதே கடல் அலையால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கடற்கரையில் நீச்சல் பயிற்சி பெற்ற காவலர்களை அரசு நியமிக்கவில்லை. அதிக இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கவில்லை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க் கட்சித்தலைவர் தொடங்கிஅரசு ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ வரை குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் ஆளுநர், முதல்வர் தொடங்கி அதிகாரிகள் வரை பலரும் மவுனமாகவே இருக்கின்றனர்.

அச்சம் உணரா மனம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. முன்பு ஆயிரக்கணக்கில் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வந்துகொண்டிருந்தனர். தற்போது இந்தஎண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. ஆனால், கடல் அலையில் சிக்கி இறப்பதை தடுக்கத்தான் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “அதிக சுற்றுலா பயணிகள் வரும் கடற்கரையில் கடல் அலையில் சிக்குவோரை மீட்க அதற் கான பணியாளர்களை நியமிப்பது அவசியம். காவல்துறை, வருவாய்துறை, நகராட்சி ஒருங்கிணைந்து பாதுகாப்புக்குழுவை ஏற்படுத்தி 200 மீட்டருக்கு இரண்டு நபர்களை நிறுத்தி, கடலில் குளிப்போரை எச்சரிக்க வேண்டும். கடலில் மூழ்கி உயிரிழந்தோர் விவரங்கள் பெயர் பலகையாக சுற்றுலாபயணிகள் பார்க்கும் வகையில் கடற்கரைச்சாலையில் எச்சரிக்கை பலகையாக வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கின்றனர்.

கடந்த 2018-ம் ஆண்டு, உள்ளூர் மீனவர்களுக்கு பயிற்சி தந்து மீட்பு பணியாளர்களாக அவர்கள் அமர்த்தப்பட்டனர். இவர்கள் சீருடையுடன் பாதுகாப்பு படகு, கயிறு ஆகியவற்றுடன் இருப்பார்கள். தலைமைச் செயலகம், காந்தி சிலை, சீகல்ஸ் ஆகியபகுதிகளில் இவர்களை காண முடியும்.இரண்டு ஷிப்ட், மாத சம்பளம் ரூ. 10ஆயிரம் தந்தனர்.

ஆனால், அரசு தரப்பில் இவர்களுக்கான ஊதியத்தை நிறுத்தி விட்டனர். அதனால் அவர்கள் பணிக்கு செல்லவில்லை. கடற்கரைக்கு வருவோரின் பாது காப்புக்காக காவல்துறையில் கடந்த 2018-ம் ஆண்டு ‘டெக்ஹேண்டலர்’ பணியிடத்துக்கு 29 பேரை நியமிக்க அறிவிப்பு வெளியானது.

இதற்காக நீச்சலில் சோதனை நடத்தப்பட்டு, எழுத்துத் தேர்வுக்கு தயாரானார்கள். ஆனால், இத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் இப்பணியிடங்களை இதுவரையிலும் நிரப்பவில்லை. இதைச் செய்திருந்தாலே பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். ஆனால், ஏனோ அதைச் செய்ய வில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

மேலும்