சென்னை: திருவிளையாடல் வசனம் போல சென்னையும், வெள்ளமும் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. 2015 வெள்ளத்தை விட இந்த முறை கடும் பாதிப்பை மக்கள் சந்தித்தனர். மாநகரில் பரவலாக பல நாட்கள் நீர் சூழந்திருந்தது. பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. பாலுக்காக நீண்ட வரிசையில் மக்கள் இதுவரை நின்றதில்லை. நாள்தோறும் திரும்பிய பக்கமெல்லாம் போராட்டக்களமாக காட்சியளித்தது. மின்சாரமும், தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டது பொதுமக்களை முற்றிலுமாக முடக்கியது. கவுன்சிலர்களையும், எம்எல்ஏக்களையும் களத்தில் பார்க்கவே முடியவில்லை. ஆறுதல் கூறகூட வரவில்லையே என மக்கள் கொந்தளித்தனர்.
வானிலை அறிவிப்பும், அரசின் செயல்பாடும்: மிக்ஜாம் புயல், நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து அதிக வெப்பம் கொண்ட நீராவியை ஈர்த்து வலுப்பெற்ற நிலையில் நிச்சயம் பரவலாக அதிகனமழை பெய்யும் என்பது துறை சார்ந்த அனைவரும் அறிந்ததே. ஆனால் வானிலை ஆய்வு மையம் டிச.1-ம் தேதியே அதிகனமழை எச்சரிக்கையை வழங்கவில்லை. 3, 4 தேதிகளுக்கு ஒரு நாள் முன்னதாக ஒருசில இடங்களில் மிக கனமழை, ஓரிரு இடங்களில் அதிகனமழை எச்சரிக்கையே விடப்பட்டது. ஆனால் இரு நாட்களில் பரவலாக அதிகனமழை பெய்துள்ளது. இதை சென்னை வானிலை ஆய்வு மையம் நிச்சயம் கணித்திருக்கும். தமிழக அதிகாரிகள் தொழில்நுட்பத்தில் சிறந்தவர்கள்.
ரேடார் இயக்குவதில் பிற மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கும் அளவுக்கு திறன் பெற்றுள்ளனர். ஆனால் அத்துறையில் டெல்லியின் அதிகாரம் திணிக்கப்படுவதும், அவர்கள் கணிப்பதையே மண்டல வானிலை மையங்கள் அறிவிக்க வேண்டும் என்ற மனப்பான்மையும் நீண்டகாலமாக மேலோங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் கூட அதிகனமழை அறிவிப்பை சென்னையால் கொடுக்க முடியாமல் போயிருக்கலாம். இது தொடர்பாக மத்திய புவி அறிவியல் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு பதில் ஏதும் அளிக்கவில்லை. வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்ட அரசுத்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, "மிக கனமழை என்றால் 12 முதல் 20 செமீ வரை பெய்யும்.
இந்த அளவுக்கு மழை வரும் என்று எதிர்பார்க்கவும் இல்லை, அதற்கேற்றவாறு நிர்வாகமும் தயாராகவில்லை. ஓரிரு நாட்களில் வடிந்துவிடும் மழையாக இருக்கும் என்றே கருதினோம்" என்றனர். நீர்வழித் தடங்களில் வெள்ளநீர் அதிகமாக வந்தால், அதனுடன் இணைந்துள்ள மழைநீர் வடிகாலில் புகுந்து குடியிருப்புகளை சூழ்வதை தடுக்க புளியந்தோப்பு ஓட்டேரி நல்லா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் மாநகராட்சி சார்பில் முதன்முறையாக கதவணைகள் அமைக்கப்பட்டன. இந்த வெள்ளத்தின்போது, இந்த கதவணைகளை இயக்கக்கூட மாநகராட்சி முயற்சிக்கவில்லை. நீர்வழித்தடங்களில் வெள்ளநீர் உயர்ந்தால், அதை கண்காணித்து கதவணைகளை இயக்க இதுவரை ஆட்களை நியமிக்கவில்லை. பிறகு எதற்கு இதை நிறுவினர் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
» “சென்னையில் நடந்ததுபோல் அல்லாமல் தென்மாவட்ட நிவாரணப் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துக” - இபிஎஸ்
2015 vs 2023 வெள்ளங்கள்: இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் 2015, 2023 வெள்ளங்கள் குறித்த ஒப்பீட்டு விவாதங்கள் அனல் பறக்கின்றன. ஒருசாரார் 2015, 2023 (இன்னும் ஆண்டு முடியவில்லை) ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் சென்னையில் பதிவான மொத்த சராசரி மழைப் பொழிவை குறிப்பிட்டு 2015-ல் ஏற்பட்ட வெள்ளம்தான் வரலாறு காணாத வெள்ளம் என்றும், ஒருசாரார் இந்த ஆண்டு டிச.3, 4 தேதிகளில் கொட்டிய அதிகனமழை குறித்த, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொள்ளாத, மாநகராட்சியின் மிகை மழை அளவை குறிப்பிட்டு 2023-ம் ஆண்டில் 36 மணி நேரத்தில் பெய்த மழையும், அதனால் ஏற்பட்ட வெள்ளமும் வரலாறு காணாதது என்று சொற்போர் நடத்தி வருகின்றனர். உண்மை நிலவரத்தை அறிய நாம் களமிறங்கினோம்.
2015-ல் நவ.8 முதல் 10 வரை வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி பெருமழையை கொடுத்தது. அப்போது அம்பத்தூரில் 20 செமீ, நுங்கம்பாக்கத்தில் 14 செமீ மழை பெய்தது. பிறகு, நவ.12 முதல் 18 வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி கனமழை பெய்தது. தொடர்ந்து, நவ.28 முதல் டிச.4-ம் தேதி வரை காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இதன் தாக்கத்தால் டிச.1-ம் தேதி விட்டுவிட்டு மழை பெய்து, அன்று இரவு அதிகனமழை கொட்டி தீர்த்தது. 24 மணி நேரத்தில் தாம்பரத்தில் 49, செம்பரம்பாக்கத்தில் 47, மீனம்பாக்கத்தில் 35, நுங்கம்பாக்கத்தில் 29 செமீ மழை பதிவானது. இந்த வெள்ளத்தின்போது புறநகர்களை விட சென்னையில் குறைவாக மழை பெய்தது.
2023-ல் டிச.3, 4 தேதிகளில் இடைவிடாது முறையே நுங்கம்பாக்கத்தில் 23, 24 செமீ (மொத்தம் 47 செமீ), மீனம்பாக்கத்தில் 25, 18 செமீ (மொத்தம் 43 செமீ), தாம்பரத்தில் 17, 23 செமீ (மொத்தம் 40 செமீ), செம்பரம்பாக்கத்தில் 16, 20 செமீ (மொத்தம் 36 செமீ) அதிகனமழை பெய்துள்ளது. இந்த முறை வெள்ளத்தை ஏற்படுத்திய மழை புறநகர்களை விட மாநகருக்குள் அதிகமாக பெய்துள்ளது. சென்னை, புறநகர் பகுதிகள் அதிகபட்சமாக கடல் மட்டத்திலிருந்து 6.7 மீட்டர் உயரத்தில் உள்ளது. பல இடங்கள் கடல் மட்டத்திலும், அதற்கு கீழும் உள்ளன. 2015 வெள்ளத்தின்போது 289 பேர் உயிரிழந்தனர். 23.25 லட்சம் வீடுகள் மூழ்கின. செம்பரம்பாக்கத்தில் இருந்து 29 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இவ்வளவு நீர் வரன்முறை இன்றி திறக்கப்பட்டதால் இது மனிதன் உருவாக்கிய வெள்ள பேரழிவு என இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015, 2023 வெள்ள பாதிப்புகள் குறித்து சென்னை பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் எஸ்.சஞ்சீவி பிரசாத் கூறியதாவது: 2015, 2023 ஆகிய இரு ஆண்டுகளிலும் முன்னெப்போதும் இல்லாத மழை பெய்தது. இயல்பாகவே சென்னையின் புவியியல் அமைப்பு மற்றும் வடிகால் அமைப்பு போன்றவை 3 முதல் 5 செமீ மழையை மட்டுமே தாங்கும். முன்பு, 5 செமீ மழை பெய்தாலே பள்ளி தலைமையாசிரியர்கள் விடுமுறை விடலாம் என்ற அரசாணையே இருந்தது. ஆனால் 2015-ல் ஒரே இரவில், குறுகிய காலத்தில் அதிகனமழை கொட்டியது. அப்போது சென்னையில் அதிகனமழை பெய்தாலும், அதை விட அதிகமாக தாம்பரம், மீனம்பாக்கம், செம்பரம்பாக்கம் பகுதிகளில் பெய்தது. இப்பகுதியில் இருந்து வரும் நீருடன், செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரும் அடையாற்றில் சங்கமித்தது. 2015 வெள்ளத்துக்கு முக்கிய காரணம் அடையாற்று நீர் மாநகருக்குள் பாய்ந்தது தான். அதனால் தென் சென்னையின் கரையோரப் பகுதிகளில் அதிக பாதிப்புகள் இருந்தன. அதில் கடுமையாக பாதிக்கப்பட்டது ஜாபர்கான்பேட்டை. அப்போது ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூரின் பல பகுதிகள், எருக்கஞ்சேரி, மூலக்கடை, அயனாவரம் போன்ற வடசென்னை பகுதிகளில் வெள்ளம் ஏற்படவில்லை.
2023 வெள்ளத்தின்போது, மிதமான மழையாகவே 36 மணி நேரம் இடைவிடாது பெய்துவிட்டது. 2015 (டிச.1), 2023 (டிச.3, 4) ஆகிய ஆண்டுகளில் பெருவெள்ளத்தை ஏற்படுத்த காரணமாக இருந்த ஓரிரு தின மழை அளவை ஒப்பிடும்போது 2023 வெள்ளத்தின்போது பெய்த மழையே அதிகம். இந்த முறை சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களை விட, சென்னையில் மழை அதிகம். 2015-லும், 2023-லும் வெள்ளத்தை ஏற்படுத்தும் மழைக்கு முன்பாகவே தொடர் மழை பெய்து நிலத்தில் நீர் ஊறியிருந்தது. அதன் பிறகு கிடைக்கும் மழைநீரை உறிஞ்சும் தன்மையை இழந்து வெள்ளமாக மாறின.
2015 வெள்ளத்தின்போது கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியே நிலவியது. அப்போது காற்று இல்லை. இந்த முறை நிலவியது தீவிர புயல். அதுவும் சென்னைக்கு 80 கிமீ தொலைவில் நாள் முழுவதும் நிலைகொண்டது. காற்றும் பலமாக வீசியதால் கடல் கொந்தளித்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்யும் மழை அனைத்தும் கூவம், அடையாறு, கொசஸ்தலையாற்றில் மட்டும் தான் வடிய முடியும். இவற்றின் முகத்துவாரப் பகுதிகளில் கடலில் இரு நாட்களாக உயரலை எழுந்தவண்ணம் இருந்ததால், இரு நாட்களில் கிடைத்த அதிகமழையின் ஒரு சொட்டு கூட கடலுக்கு செல்ல முடியாமல் மாநகரில் கிடைத்த இடங்களில் தேங்கியது.
சுருங்கிய வேளச்சேரி, பள்ளிக்கரணை: வழக்கமாக தமிழகம் நோக்கி வந்த புயல்கள் நேராக கரையை கடந்துவிடும். இதற்கு குறைந்த காலமே பிடிக்கும். புயலின் சீற்றமும் சில மணி நேரங்களே இருக்கும். ஆனால் முதல்முறையாக மிக்ஜாம் புயல் சென்னையை ஒட்டி வந்து, அப்படியே நிலைகொண்டு, மெதுவாக நகர்ந்து, பின்னர் வளைந்து சென்று பெருமழையை கொடுத்தது. சென்னையை விட்டு நகர்ந்து மழை விட்டாலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4-ம் தேதி இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வடசென்னை பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனாலேயே 2015-ஐ விட 2023-ல் மாநகரம் முழுவதும் பாதிப்பு அதிகமாகவும், அதிக நாட்களும் இருந்தது. வரும் காலங்களில் இதைவிட அதிகமழை தான் பெய்யும். எனவே அதற்கு ஏற்றவாறு நகர திட்டமிடல், வெள்ள மேலாண்மை திட்டங்கள் அமைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வேளச்சேரி ஏரியின் உண்மையான பரப்பளவு 107.48 ஹெக்டேர். அரசுத் துறைகளுக்கு ஏரி பகுதிகள் ஒதுக்கப்பட்டதால் 22.4 ஹெக்டேராக குறைந்துவிட்டது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு 21.44 ஹெக்டேர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு 56.39 ஹெக்டேர், அதே வாரியத்துக்கு அங்கீகரிக்கப்படாமல் 3.17 ஹெக்டேர், நெடுஞ்சாலைத்துறைக்கு 0.04 ஹெக்டேர் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசுத்துறைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டதால் ஏரியின் முழு நீர் கொள்திறன் (19.23 மில்லியன் கனஅடி) 4-ல் ஒரு பங்காக குறைந்துவிட்டது. ஏரியில் 1100 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதே,போல பள்ளிக்கரணையின் உண்மையான பரப்பு 5500 ஹெக்டேர். இப்போது அரசு வசம் 695 ஹெக்டேர் மட்டுமே உள்ளது. அதில் 84.57 ஹெக்டேரில் மாநகராட்சி குப்பை கொட்டியுள்ளது. 5 ஆயிரம் குடியிருப்புகள் ஆக்கிரமித்திருப்பதாக அரசு சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் சார்ந்து அதிக ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்தஷீலா நாயர் கூறியதாவது: முன்பெல்லாம் சென்னை என்றாலே வறட்சி நகரமாக இருந்தது. குடிநீர் விநியோகம் செய்ய முடியாமல் தவிப்போம். 1996-ம் ஆண்டு நான் சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநராக இருந்தேன். அப்போது திமுக ஆட்சியை பிடித்தது. சென்னையில் கடும் வறட்சி நிலவுவது தொடர்பாக முதல்வர் மு.கருணாநிதியை சந்தித்தேன். அப்போது துறைமுருகன் பொதுப்பணித்துறை அமைச்சர். உடனே உயர்மட்ட கூட்டம் கூட்டப்பட்டது. மாநகர நீர் தேவையை பூர்த்தி செய்ய நான் வீராணம் திட்டம், மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் தேவை என விவரித்தேன். கூட்டத்தில் எனது யோசனைக்கு ஆதரவு இல்லை.
அப்போது, ஆட்சியாளர்கள் கடவுள் மறுப்பாளர்கள் என்பதை மறந்து, தண்ணீர் பஞ்சத்தில் இருந்து சென்னை மக்களை காக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என்றேன். அடுத்த சில மாதங்களில் தொடர் மழையால் மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்து. அந்த மழைக்கு நடுவே, கருணாநிதியுடன், ராசாத்தியம்மாள் இல்லத்துக்கு செல்ல நேர்ந்தது. மேற்கண்ட நிகழ்வை கருணாநிதி ராசாத்தியம்மாளிடம் தெரிவித்திருப்பார்போல் தெரிகிறது. என்னை அழைத்த ராசாத்தியம்மாள், கடவுளிடம் ஏதோ வேண்டிக்கொண்டீர்களாமே, அதை கொஞ்சம் நிறுத்துங்களேன் என்றதும், அங்கு ஒரே சிரிப்பலை. அப்படி வறட்சி நிலவிய சென்னையில் இப்போது ஆண்டுதோறும் அதிகனமழை பெய்கிறது. அதிகனமழை பெய்யும் ஆண்டுகளுக்கான இடைவெளியும் குறைந்துவிட்டது.
நான் சிஎம்டிஏவில் உறுப்பினராக இருந்தேன். அப்போது வேளச்சேரி ஏரியை நில வகை மாற்றம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அதை கடுமையாக எதிர்த்தேன். தீர்மானத்தை நிறைவேற்றினாலும் எனது எதிர்ப்பை பதிவு செய்ய வலியுறுத்தினேன். ஆனால் என்னை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, பின்னர் நில வகை மாற்றம் செய்தனர். இன்று வேளச்சேரி என்ன ஆனது என்பது அனைவருக்கும் தெரியும். 2015-ல் ராதாகிருஷ்ணன் சாலை, வாலாஜா சாலை, ராயப்பேட்டை அதிமுக அலுவலகம் போன்ற இடங்களில் வெள்ளம் வரவில்லை. இப்போது வெள்ளம் வந்துள்ளது. மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையிலும் அதிக நீர் தேங்கியது. இதற்கு பக்கிங்ஹாம் கால்வாயை மறித்து, பறக்கும் ரயில் திட்டம் அமைத்தது தான் காரணம்.
முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளங்களுக்கு அடையாறு காரணமாக இருக்கலாம். இந்த வெள்ளத்தில் பக்கிங்ஹாம் கால்வாய் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. அத்திட்டத்தை நான் அப்போதே கடுமையாக எதிர்த்தேன். அதன் தொடக்க விழா சிந்தாதிரிப்பேட்டையில் தான் நடந்தது. அப்போது விழா ஏற்பாட்டு பணிகள் என்ற பெயரில், 10 நாட்கள் எனது வாகனத்தை, அங்குள்ள குடிநீர் வாரிய அலுவலகத்துக்கு செல்ல விடாமல் ரயில்வே துறையினர் தடுத்தனர். வரும் காலங்களில் மழையின் அளவு மேலும் அதிகரிக்கும். மழைநீர் வடிகால் கட்டினால் தீர்வாகும் என்று கூறிவிட்டு, மழைநீர் வடிகால் கட்டிய பிறகும், மோட்டார் போட்டு தான் நீர் வெளியேற்றப்படுகிறது. சென்னை போன்ற நகரங்களில் மழைநீர் தேங்காத நிலையை ஏற்படுத்த முடியாது என்பதை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். இனி மழைநீர் தேங்காமல் இருக்க திட்டங்களை தீட்டக்கூடாது. மழைநீர் தேங்கும் நேரத்தை குறைக்கும் திட்டங்களை தீட்டுவதுதான் சிறந்தது.
புயல் மற்றும் மழை காலங்களில் கடல் சீற்றமாக இருக்கும்போது, ஆறுகளில் வெள்ளநீர் வெளியேறாது என்ற படிப்பினையை இப்போது கற்றுக்கொண்டோம். இயல்பான காலங்களிலேயே முகத்துவார பகுதியில் 6 மணி நேரத்துக்கு உயரலையும், 6 மணி நேரத்துக்கு தாழ்வலையும் மாறி மாறி நிகழும். தாழ்வலை நிலவும்போது தான் மழைநீரை கடல் உள்வாங்கும். புயல் சீற்றத்தின்போது 24 மணி நேரமும் மழைநீரை உள்வாங்காது. இதுபோன்ற நேரங்களிலும், உயரலையின்போதும் முகத்துவாரப் பகுதிகளில் ராட்சத மோட்டார் கொண்டு அதிகப்படியான நீரை கடலில் விடுவதுதான் சிறந்த தீர்வாக இருக்கும். கொல்கத்தாவில் மழைநீர் வடிகாலுக்கு பதிலாக நிரந்தர மோட்டார்களை அமைத்துதான் நீரை வெளியேற்றுகிறார்கள்.
ஜப்பானில் நகரங்களின் நடுவில் நீர்நிலைகளை உருவாக்குகிறார்கள். சுனாமி ஊருக்குள் புகுவதை தடுக்க கடலோரப் பகுதியில் பெரிய கான்கிரீட் பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளனர். சுனாமி வரும்போது, கடல் நீரை அந்த பள்ளங்கள் உள்வாங்கிக் கொள்கின்றன. சுனாமியின் தாக்கம் முடிந்ததும், கடல் நீரை வெளியேற்றிவிடுகின்றனர். மழைநீரை கடல் உள்வாங்காதபோது, இதுபோன்ற பள்ளங்களை ஏற்படுத்தி மழைநீரை நிரப்பலாம். நவி மும்பை பகுதியிலும் இவ்வாறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் சாலைகளை அகலப்படுத்த நிலத்தை கையகப்படுத்தி, ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளை இரக்கமின்றி அரசு இடிக்கிறது. அதுபோல மாநகரில் உள்ள நீர்வழித் தடங்களையும் அகலப்படுத்த, அவற்றை ஒட்டிய நிலங்களை அரசு ஏன் கையகப்படுத்தக்கூடாது? இவ்வாறு அவர் கூறினார்.
கட்டுமானங்கள் அதிகரிப்பு: 2015 வெள்ளத்துக்கு பிறகு தற்போது வரை சிஎம்டிஏ எல்லையில் சிஎம்டிஏ சார்பில் 3,942, சென்னை மாநகராட்சி சார்பில் 54,475 என மொத்தம் 58,424 கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளில் மேலும் அதிகமாக அனுமதிகள் வழங்கப்பட்டிருக்கும். இதன் மூலம் கடந்த 2015-ம் ஆண்டை விட இப்போது இவ்வளவு கட்டுமானங்கள் அதிகரிப்பதால் நிலத்துக்கு நீர் செல்லும் அளவு குறைந்து, வெள்ள பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.
அடையாறும், வெள்ளமும்: சென்னையில் 1976, 1985, 1996, 2005 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளங்கள் அனைத்தும் அடையாற்றில் பாய்ந்த வெள்ளத்தால் ஏற்பட்டது. அடையாற்றின் கொள்திறன் வினாடிக்கு 49,692 கனஅடி. ஆனால் 2015 வெள்ளத்தின்போது வினாடிக்கு 1.34 லட்சம் கனஅடி நீர் பாய்ந்தது. அடையாற்றில் செம்பரம்பாக்கம் ஏறி மட்டுமல்லாது 222 ஏரிகளின் உபரிநீரும் அப்போது இணைந்தது. இந்த முறை அடையாற்றில் சுமார் 45 ஆயிரம் கனஅடிநீர் தான் பாய்ந்தது.
2015-க்கு பிறகு அடையாற்றில் 5,020, கூவம் ஆற்றில் 13,484 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளன. இரு ஆறுகளும் தூர்வாரப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ளது. ஆற்றுக்குள் குப்பை கொட்டுவதும் தடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆறுகளில் நீர்கொள்திறன் அதிகரித்து, நீரோட்டம் பாதிக்காமல் உள்ளது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
சுற்றுச்சூழல்
11 hours ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
8 days ago