இன்னும் சீரமைக்கப்படாத குட்லாடம்பட்டி அருவி - கஜா புயலின் நினைவு சின்னமா?

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரையின் குற்றாலம் என அழைக்கப்படும் குட்லாடம்பட்டி அருவியில் 2018-ல் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க 5 ஆண்டுகளாக நிதி ஒதுக்காததால் நிரந்தரமாக மூடிக் கிடக்கிறது.

மதுரை மாவட்ட வனத்துறையின் சோழவந்தான் வனச்சரக கட்டுப்பாட்டில் குட்லாடம்பட்டி அருவி பகுதி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் தொடர் மழை பெய்தால் குட்லாடம்பட்டி அருவியில் தண்ணீர்  ஆர்ப்பரித்துக் கொட்டும் செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாத வரையிலான 4 மாதங்களில் மதுரையைச் சுற்றியுள்ள மாவட்ட மக்கள் இங்கு வந்து குளித்து மகிழ்வர்.

இது குறித்து சமய நல்லூரைச் சேர்ந்த கணபதி ‘இந்து தமிழ் திசை' உங்கள் குரல் சேவை மூலம் கூறியதாவது: கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயலின் போது இங்குள்ள அருவியில் பாறைகள் உருண்டு விழுந்ததில் பயணிகள் குளிக்கும் பகுதி, தண்ணீர் செல்லும் ஓடைகள் சேதமடைந்தன. சுற்றுலா பயணிகள் செல்லும் பாதையும் சேதமடைந்தது.

சீரமைப்பு பணிகள் செய்த பின்னர் திறக்கப்படும் என்று கூறி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக வனத்துறையினர் இந்த அருவியை பூட்டியே வைத் துள்ளனர். கஜா புயலுக்கான நினைவுச் சின்னம் போல் நிரந்தரமாக மூடி வைத்துள்ளனர். இந்த விஷயத்தில் உள்ளூர் அமைச்சர்கள் தலையிட்டு தேவை யான நிதியை பெற்றுத்தர வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்கும் போதெல்லாம், அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம், நிதி கிடைத்ததும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற பதிலையே தொடர்ந்து தருவதால் மதுரை மற்றும் அண்டை மாவட்டச் சுற்றுலாப் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE