அழிவின் விளிம்பில் உள்ள நிலையில் ஒகேனக்கல் வனச்சரகத்தில் கூட்டமாக உலா வரும் குள்ளநரிகள்

By செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனச் சரகத்தில் குள்ளநரி உள்ளிட்ட விலங்குகள் கூட்டமாக உலவும் காட்சிகள் வனத்துறை அமைத்த கேமராக்களில் பதிவாகி உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் குறிப்பிட்ட அளவு நிலப்பரப்பு வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதிகளில் நரி, செந்நாய், காட்டெருமை, காட்டுப்பன்றி, மான், மயில், குரங்கு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் வனச் சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இதர விலங்கினங்களுடன் யானை, சிறுத்தை ஆகிய விலங்கினங்களும் வசிக்கின்றன. இந்த விலங்கினங்களின் உணவு மற்றும் தண்ணீர் தேவைகள் பெரும்பாலும் வனப்பகுதியிலேயே நிறைவேறி விடுகின்றன.

இருப்பினும், கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையால் வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறும் சூழல் உருவாகிறது. இதை தடுக்கும் விதமாக வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில், ஒகேனக்கல் வனச் சரகத்தில், உயிர்ப்பன்மை பாதுகாத்தல் மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் 3 இடங்களில் தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பி வைக்கப்படுகிறது. இதில் ஒகேனக்கல் சரகம் கோயில்பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியைச் சுற்றி தானியங்கி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

வன விலங்குகளின் நடமாட்டம் அறியவும், வனத்துக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் இந்த கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. தொட்டியில் தண்ணீர் அருந்தும், குளிக்கும் விலங்கினங்களின் காட்சிகள் கேமராக்களில் பதிவாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு குள்ள நரிகள் கூட்டமாக வந்து தண்ணீர் தொட்டியில் நீர் பருகியும், குளித்தும் மகிழ்ந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இதுதவிர, யானைகள், காட்டுப் பன்றிகள், மயில்கள் ஆகியவையும் வந்து செல்லும் காட்சிகளும் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு கூறியதாவது: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் வனச் சரகங்களில் ஏற்கெனவே பல்வேறு திட்டங்களின் கீழ் 12 இடங்களில் வன விலங்குகளின் தண்ணீர் தேவைகளுக்காக தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இவைதவிர, ஒகேனக்கல் சரகத்தில் தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் 3 இடங்களில் புதிதாக தொட்டிகள் நிறுவப்பட்டுள்ளன.

இவற்றில், கோயில்பள்ளம் பகுதியிலுள்ள தண்ணீர் தொட்டியைச் சுற்றி நிறுவப்பட்டுள்ள தானியங்கி கேமராக்களில் வன விலங்குகள் வந்து செல்லும் காட்சிகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. யானைகளும், மயில்களும் தான் அதிக அளவில் வந்து செல்கின்றன. காட்டுப்பன்றிகள் அரிதாக வருகின்றன. இந்நிலையில், அழிவின் விளிம்பில் உள்ள குள்ளநரிகள் தற்போது கூட்டமாக வந்து தண்ணீர் பருகி செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது, என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE