பொள்ளாச்சி: கடந்த தலைமுறையில் தொழிற்புரட்சி, வளர்ச்சி என்ற பெயரில் கனிமங்களை எடுக்க, அணைகள் கட்ட, அதிவேக சாலைகள் அமைக்க கோடிக்கணக்கான மரங்களை வெட்டி, லட்சக்கணக்கான ஏக்கர் வனங்கள் அழிக்கப்பட்டன. அதன் விளைவால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக அதீத மழைப்பொழிவு, அதிகரிக்கும் வெப்ப நிலை, கடும் வறட்சி, காற்று மாசு, உருகும் பனிப்பாறைகள், உயரும் கடல்மட்டம் ஆகியவற்றால் இன்றைய தலைமுறையினர் பாதுகாப்பான எதிர்காலத்தை இழந்து வருகின்றனர். அவ்வாறு பொட்டல் வெளி ஆக்கப்பட்ட ஆனைமலை வனப்பகுதியில், லட்சக்கணக்கில் தேக்கு மரங்களை நடவு செய்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் வனத்தை மீட்டெடுத்து, பசுமைமாறா காடாக மாற்றியவர் ஹியூகோ வுட்.
18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியால், அங்கு ஏராளமான புதிய தொழிற்சாலைகள் உருவாகின. இங்கிலாந்தின் காடுகளி லிருந்த வலிமையான ஓக் மரங்கள் முற்றிலும் வெட்டி எடுக்கப்பட்டன. புதிய கப்பல்கள் கட்டவும், தொழிற்சாலைகளை நிர்மாணிக்கவும், புதிய ரயில் பாதைகளை உருவாக்கவும், துறைமுகங்கள் கட்டவும், தந்தி கம்பங்கள் நடவும் ஐரோப்பிய நாடுகளில் ‘ஓக்’ மரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, இங்கிலாந்தின் பார்வை காலனி நாடான இந்தியாவின் பக்கம் திரும்பியது. 1800-களில் சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த இயற்கை ஆர்வலரான புக்கானன் பிரான்சிஸ் ஹெமில்டன் என்பவர், சென்னை மாகாண கவர்னர் ஜெனரலாக இருந்த எட்வார்டு கிளிவ் என்பவருக்கு அளித்த அறிக்கையை தூசி தட்டி எடுத்தது ஆங்கிலேய அரசு.
அதில், கொங்கு நாட்டில் பொள்ளாச்சிக்கு தெற்கே ஆனைமலை காடுகளில் தேக்கு, பலா, கடம்பு, வேங்கை, ஈட்டி உள்ளிட்ட வலிமையான மரங்கள் உயர்ந்தோங்கி வளர்ந்துள்ளன. அதில், தேக்கு மரம் ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஓக் மரங்களைப்போல் உயரமும், வலிமையும் கொண்டது என்பதை தெரிந்துகொண்டு, ஆனைமலை வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த தேக்கு மரங்களை வெட்டி வேருடன் தோண்டி எடுத்தனர். ஆங்கிலேயரின் வளர்ச்சி பசிக்கு ஆனைமலையின் உலாந்தி சோலைக் காடுகள் இரையாகின. வனம் வறண்ட பூமியானது. பலமீட்டர் உயரமுள்ள தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு, யானைகள் மூலமாக இழுத்துவரப்பட்டன. வகறையாற்றின் அருகில் உயரமான இடத்தில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டன.
சர்க்கார்பதி அருகே பள்ளத்தில் வந்து விழுந்த மரங்கள் சேகரிக்கப் பட்டு, மாட்டு வண்டி மூலமாக சுப்பேகவுண்டன் புதூரில் உள்ள ரயில் நிலையத்துக்கு கொண்டுவந்து சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து ரயில் மூலமாக கொச்சி துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கப்பல்கள் மூலமாக இங்கிலாந்துக்கு கடத்தப்பட்டன. உயரமான இடத்திலிருந்து மரங்கள் கீழே தள்ளப்பட்டதால், அந்த இடம் இன்றும் ‘டாப்சிலிப்’ என அழைக்கப்பட்டு வருகிறது. வனம் அழிக்கப் பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்த வன உயிரினங்கள், அடிவாரத்தில் இருந்த விளைநிலங்களிலும், கிராமங் களிலும் புகுந்தன. மரங்களற்ற வனமாக மாறிய ஆனைமலை வனப்பகுதியை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் ஆங்கிலேய அரசுக்கு ஏற்பட்டது.
» பிறந்தநாளுக்கு வாழ்த்திய ஆளுநர், முதல்வருக்கு ரஜினி நன்றி
» தமிழகத்தில் இறுதி ஊர்வலங்களுக்கான விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
இந்நிலையில், 1855-ல் காடு களை பாதுகாக்க காட்டு இலாகா என்ற தனித்துறை ஏற்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆஜ்மீர் காடுகளை சிறந்த முறையில் நிர்வகித்து வந்த ‘ஹியூகோ பிரான்சிஸ் அன்றேவ் வுட்’ என்ற காட்டு இலாகா அதிகாரியை, 1915-ல் ஆனைமலை பகுதிக்கு அனுப்பியது ஆங்கிலேய அரசு. வனத்தையும், வன உயிரினங்களையும் மிகவும் நேசித்த ஹியூகோ வுட், அனைத்து வசதிகளும் கொண்ட பங்களாவில் வசிக்க விரும்பாமல், டாப்சிலிப் பகுதியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள உலாந்தி பள்ளத்தாக்கில் ‘மவுன்ட் ஸ்டுவர்ட்’ என்ற சிறிய ஓட்டு வீட்டில் தங்கினார். மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட வனப்பகுதியில் பயணம் செய்த ஹியூகோ வுட், 25 ஆண்டுகளுக்கு மேல் வயதுள்ள மரங்களை மட்டுமே வெட்டுவது, அவற்றை வேருடன் தோண்டி எடுக்காமல் மண்ணின் மேற்பரப்பிலிருந்து, மேலே ஓர் அடி உயரம் விட்டு மரங்களை வெட்டுவது என முடிவு செய்தார்.
இதனால் மரங்கள் மீண்டும் துளிர்விட்டு முளைக்கும். காடுகள் அழியாது. வெட்டப்பட்ட ஒரு மரத்துக்கு பதிலாக 4 மரக்கன்றுகளை நடுவது, இதன்மூலமாக காடுகள் அழியாமல் காப்பாற்ற முடியும் என்ற மறுசீரமைப்புக்கான இவரது செயல் திட்டத்தை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொண்டது. அன்றைய காலக்கட்டத்தில் வழக்கத்தில் இருந்த மரங்களை நிலத்திலிருந்து வேருடன் தோண்டி எடுத்து, மர அறுவடை செய்யும் நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வந்தார். மரத்தின் அடிப்பகுதியை ஓர் அடி விட்டு, மரங்களை வெட்டும் முறையை (Coppice Method) இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்.
பணி நேரம் போக, மீதி நேரம் காடுகளில் தனியாக நடந்து கொண்டேயிருக்கும் ஹியூகோ வுட், தன்னுடன் எடுத்துச் செல்லும் பையில் தேக்கு விதைகளை நிரப்பி இருப்பார். தனது வெள்ளி பூண் போட்ட ஊன்று கோலால், நிலத்தில் ஓர் அடி ஆழம் குழி தோண்டி, அந்த குழியில் ஒரு தேக்கு விதையை விதைப்பார். இவ்வாறு 15 அடி இடைவெளிக்கு ஒரு விதை என 1916-17-ம் ஆண்டில், 25-ஏக்கர் பரப்பில், இவர் நடந்து, நடந்து நட்ட விதைகள், இன்று உலாந்தி பள்ளத்தாக்கு பகுதிகளில் பல மீட்டர் உயரமுள்ள தேக்கு மரங்களாக நிற்கின்றன. உலாந்தி பள்ளத்தாக்கு காடுகளில் சுற்றிவந்த ஹியூகோ வுட், அங்கு வசித்து வந்த காடர் இன பழங்குடியின மக்களின் உதவியுடன் வனத்தில் நடவு செய்த புதிய மரக் கன்றுகள், தற்போது பல நூறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வானு யர்ந்த தேக்கு மரங்கள் நிறைந்த சோலைக்காடுகளாக உள்ளன.
மரங்களுக்கு நடுவே ஹியூகோ வுட்: வனத்தையும், வன உயிரினங்களையும் நேசித்த ஹியூகோ வுட் திருமணம் செய்துகொள்ளவில்லை. பணி ஓய்வு பெற்று, குன்னூரில் வசித்து வந்த இவர் 12-12-1933-ல் மறைந்தார். இவர், தனது உயிலில் தெரிவித்திருந்தபடியே, உலாந்தி வனச்சரகத்தில் அவர் மிகவும் நேசித்த ஆனைமலை காட்டில் அவரால் நட்டு வளர்க்கப்பட்ட தேக்கு மரச்சோலைகளுக்கு மத்தியில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அவரது கல்லறையின் மீது என்னை காண விரும்பினால், சுற்றிலும் பாருங்கள்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இயற்கையை நேசித்த ஹியூகோ வுட் இங்கு புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டுள்ளார். இங்கு ஓங்கி வளர்ந்துள்ள தேக்கு மரங்களே அதற்கு சாட்சிகளாக உள்ளன.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
14 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
18 days ago
சுற்றுச்சூழல்
21 days ago
சுற்றுச்சூழல்
24 days ago