வன விலங்குகளை கொல்ல ‘அவுட்டுகாய்’ பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: கோவை ஆட்சியர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கோவை: வன விலங்குகளை கொல்ல ‘அவுட்டுகாய்' எனப்படும் நாட்டு வெடியை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட நாயக்கன் பாளையத்தில் உள்ள சிஆர்பிஎஃப் பயிற்சி கல்லூரி வளாக பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை கடந்த 3-ம் தேதி வனப்பணியாளர்கள் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பிரேத பரிசோதனையில், அவுட்டு காயை கடித்த போது வெடித்ததால், யானையின் நாக்கு சிதைந்திருந்ததும், யானையின் கீழ் தாடை எலும்பு உடைந்து, மேல் அன்ன பகுதி கருகி இருந்ததும், அதனால் உணவை அசைபோட முடியாமல் யானை உயிரிழந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம், வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், நடப்பாண்டில் இது போன்று அவுட்டு காயை கடித்த போது வெடித்து, மூன்றாவதாக உயிரிழக்கும் யானை இது என்பதால், இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், அவுட்டுகாய் எனப்படும் நாட்டு வெடியை கொண்டு வன விலங்குகள் கொல்லப்படுதல் மற்றும் நாட்டு வெடியை ஒழிப்பது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பிறகு ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அண்மைக் காலமாக நாட்டு வெடிகுண்டுகளால் ஏராளமான வனவிலங்குகள் இறந்துள்ளன. அம்மோனியம் நைட்ரேட், கந்தகம் மற்றும் பொட்டாசியம் குளோரைடு போன்ற வெடிபொருட்கள் இறைச்சி மற்றும் பழங்களின் வெளிப்புற உறையில் மறைத்து வைக்கப்படுகின்றன. வன விலங்குகள் இவற்றை உண்ண முற்படும் போது, வாய் வெடித்துச் சிதறி உயிரிழக்கின்றன.

குறிப்பிட்ட நோக்கத்திற்காக இந்த வெடி மருந்துகளை கையாள உரிமம் பெற்ற குவாரிகள், பட்டாசு தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் இருந்து இந்த வெடி பொருட்கள் சட்டவிரோதமாக பெறப்படுவதாக தெரிய வந்துள்ளது. எனவே, வெடிமருந்துகள் கையாளும் உரிமம் தவறாகப் பயன்படுத்தப்படுத்துவதை கருத்தில் கொண்டு, சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், விவசாயிகள் வெடிபொருட்களை வாங்கி வனவிலங்குகளை கொல்ல பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது. சட்டத்தை மீறி வனவிலங்குகள் கொல்லப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வெடிபொருள் சட்டத்தை மீறுவோர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, மாவட்ட வன அலுவலர் நா.ஜெய ராஜ், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர், தொழிற்துறை பாதுகாப்பு மற்றும் நலன் இணை இயக்குநர் மற்றும் குவாரி உரிமையாளர்கள், பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE